இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப்பெற்றுக் கொண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
177 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது. அசார் அலி 64 ஓட்டங்களுடனும் யூனிஸ்கான் 23 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய யூனிஸ்கான் மேலும் 17 ஓட்டங்கள் எடுத்து 40 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முக்கிய இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததால் பாகிஸ்தான் அணி அதிக ஓட்டங்கள் குவிக்கும் வாய்ப்பை இழந்தது.
ஒருபுறம் விக்கெட் டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அசார் அலி சிறப்பாக விளையாடி சதம் பெற்றார். சதம் அடித்த அவர் 117 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் 329 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை யும் இழந்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் நான்கு விக்கெட்டுகளையும் சமீர மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்கள் அதிகம் பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு 153 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பிக்கும் முன் மழை குறுக்கிட்டது. அத்துடன் 4ஆவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இதில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் ஐந்து பிடியெடுப்புகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் மூலம் ஆறு பேரை ஆட்டமிழக்கச் செய்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் 5 ஆவதும் இறுதிநாளுமான இன்று காலநிலை சற்று மப்பும்மந்தாரமான நிலையில் காணப்பட்டது. இலங்கை அணியின் வெற்றிக் கனவை மழை குறுக்கிட்டு தகர்க்குமோ என்ற அச்சம் நிலவியது.
மழை குறுக்கிட்டு போட்டி தடைபடுமோ என்ற அச்சத்துடன் களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மாத்திம் இழந்து வெற்றிக்கு தேவையான 153 ஓட்டங்களை பெற்று 2 ஆவது டெஸ்ட் போட்டியை தன் வசப்படுத்தியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.