பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எஸ்.எப்.ஆர்.டி செரண்டிப் பௌண்டேஷனின் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 13 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று 28-06-2015 சனிக்கிழமை சிகரம் கிராமத்தில் இடம்பெற்றது.
வீடுகளை கட்டுவதற்கு வசதியில்லாத குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 13 வீடுகளை கையளிக்கும் பேற்படி நிகழ்வில், செரண்டிப் பௌண்டேஷனின் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் வாஜித் (இஸ்லாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் சபீல் நளீமி, அதன் முன்னாள் உப தலைவர் சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தின் செயலாளர் ஸாதிகீன், அதன் உப தலைவர் காலித் ஜேபி, முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், செரண்டிப் பௌண்டேஷனின் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் வீடுகள் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடும் கையளிக்கப்பட்டது.
இங்கு திறந்து வைக்கப்பட்ட 13 வீடுகளுக்கான வீட்டு தளர்பாடங்கள் செரண்டிப் பௌண்டேஷனின் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வீட்டுத் தொகுதியில் இஸ்லாமிய கலாசார மத்திய நிலையமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.