ஆசைக்கு அடிபணியாதவர் !

tumblr_m9blh5uf8f1rahmvco1_500

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மண், பொன், பெண்ணாசைக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்கள்.
அரபுநாட்டில் வளர்ந்த குறைஷி இனத்தவர், நாயகத்தின் கொள்கைகளை ஏற்கவில்லை.
இஸ்லாம் உருவாவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை எல்லாம் மீறி இஸ்லாம் வேகமாக வளர்ந்தது.
இதனால், குறைஷிகள் பீதியடைந்தனர். தங்கள் ஆதிக்கம் குலைந்து விடுமே என எண்ணி, அண்ணலாரைச் சரிக்கட்டும் பணியில் இறங்கினர்.
ஒருநாள் கஃபாவில் குறைஷி பிரமுகர்கள் கூடினர். அவர்களில் உத்பா பின் ரபிஆ என்பவரும் ஒருவர். அவர் பிரமுகர்கள் மத்தியில், “”எனக்கு யோசனை பளிச்சிடுகிறது. முஹம்மதை (நபிகள் நாயகம்) நாம் ஆசை வார்த்தைகளால் மயக்கி விடலாம். ஒருவேளை அவர் அதில் மயங்கி நம் வழிக்கு வந்துவிடுவார்,” என்றார்.
“இது மிக நல்ல யோசனை. ஆசைக்கு அடி பணியாதவர் இவ்வுலகில் யார்?’ என எல்லாரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். உத்பா நாயகத்தைத் தேடிச் சென்றார்.
“”சகோதரர் மகனே! நீர் உயர்ந்த குடியில் பிறந்தவர். உம் மூதாதையரின் பெருமையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. மேலும் நீர் எங்களைச் சேர்ந்தவர். நமது தெய்வங்களையும் ஆச்சாரங்களையும் கண்டித்து நீர் பிரசாரம் செய்வதால், நமக்குள் வீண் சண்டையே ஏற்படுகிறது. இதைச் சரிப்படுத்த சில யோசனைகளைச் சொல்கிறேன்,” என நாயகம் அவர்களைப் புகழ்ந்தார்.

அண்ணலாரும், “சரி சொல்லுங்கள்’ என்றார்கள்.
“உமக்கு பொருள் மீது விருப்பமிருந்தால், எங்களின் செல்வங்களை எல்லாம் உமது காலடியில் கொண்டு வந்து கொட்டுகிறோம். பதவி வேண்டுமென்றால், உம்மையே எங்கள் மன்னராக்கி விடுகிறோம். பெண்கள் வேண்டுமென்றால், இந்த அரபு நாட்டிலேயே சிறந்த பேரழகியை உம்மிடம் ஒப்படைக்கிறோம். இத்தனையும் வேண்டாமென்றால், உமது மூளையில் ஏதோ கோளாறு என்று தான் நாங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அதையும் சீர்செய்ய வேண்டுமளவு பொருள் தருகிறோம்,” என்றார்.
அவர் இப்படி பேசியதற்காக, நாயகம்(ஸல்) அவர்கள் கோபிக்கவில்லை. மாறாக, புன்னகை பூத்த முகத்துடன், “”அன்பரே! எனக்கு எந்தக் கோளாறும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன், என்னை அவனது தூதனாக நியமித்து, உங்களை நேர்வழிப்படுத்த எனக்கு கட்டளையிட்டிருக்கிறான். அவனது திருவசனங்களைக் கேளுங்கள்,” என்றபடியே குர்ஆனின் 41ம் ஹாமீம் அத்தியாயத்தின் 37 திருவசனங்களை ஓதிக்காட்டினார். உத்பாவின் மனம் மாறிவிட்டது.
அவர் குறைஷிகளிடம் சென்று, நாயகத்தைப் பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.
குறைஷிகள் அதை ஏற்கவில்லை. மாறாக, உத்பாவை நாயகம் தன் பேச்சாலேயே மயக்கிவிட்டார் என முடிவு கட்டினர். எனவே, அவர்களில் சிலர் மீண்டும் அண்ணலாரைச் சந்தித்தனர்.
உத்பா சொன்ன அதே ஆசை வார்த்தைகளை அண்ணலாரிடம் உதிர்த்தனர். நபிகளோ தன் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார்கள்.
இதனால் தான் இஸ்லாம் இன்று பெருமையுடன் திகழ்கிறது.