டில்லி மெட்ரோ ரயில் தனது மின் தேவை முழுவதையும் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக பெற விரும்புகிறது. இதற்காக அம்மாநிலம் ராஜஸ்தானின் உதவியை நாடி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் 500 மெகவாட் அளவிற்கு மின் சக்தியை அம்மாநிலத்திலிருந்து பெற இருக்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான மின் கொள்முதல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருப்பதாக டில்லி மெட்ரோ ரயில் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது டில்லி மெட்ரோ தனக்கு தேவையான மின்சாரத்தை நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் வாயிலாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ 6.94 க்கு கொள்முதல் செய்கிறது. இதற்கும் குறைவான விலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மின்சாரத்தை பெற விரும்புவதாக அவர் தெரிவித்தார். சூரிய ஒளி மின்சாரம் என்பதால் சாதகமான கொள்முதல் உடன்படிக்கைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது டில்லி மெட்ரோ ரயிலின் மின் தேவை 150 மெகா வாட்டாக இருக்கிறது. ரயில் திட்டம் மூன்றாம் கட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் போது 250 மெகா வாட்டாக மாறும் வாய்ப்பு இருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரி மேலும் தெரிவித்தார். இரு மாநிலங்களுக்கு இடையேயான மின் தேவை தொடர்பான பிரச்சனைகளில் மத்திய அரசு தலையிட்டு சாதகமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று டில்லி மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.