பா.ஜனதா மந்திரிகள் மீதான குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி !

Chidambaram_7 

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கும் வகையில் பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கட்சி கொடியேற்றி வைத்து பேசினார்.

திருக்கட்டளை ஊராட்சியில் அவர் பேசியதாவது:-

தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு முடிந்து விட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தார்கள் என வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்பும் நேரம் வந்து விட்டது. ஒரு ஆண்டு என்பது மொத்த ஆட்சியில் 20 சதவீத ஆட்சி காலம் முடிந்து விட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்பதை நம்முடைய அரசு, நம்முடைய பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் நல்ல காலம் பிறக்கும் என முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்குத்தான் நல்ல காலம் பிறந்து உள்ளது. பா.ஜ.க ஆட்சியில் விவசாயிகளுக்கு நல்ல காலம் இல்லை. நன்கு படித்த எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் 40 நாளாக சுருங்கி விட்டது. இதில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு இடமில்லை.

கடந்த 15 நாட்களாக மராட்டிய அமைச்சர்கள் மீதும், ராஜஸ்தான் முதல்-அமைச்சர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது வாய்மூடி மவுனமாக இருந்தார் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 15 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? இது போன்ற செயல்பாடுகளால் பா.ஜ.க ஆட்சியில் ஒரு ஆண்டு காலம் வீணாகி விட்டதைப்போல அடுத்த 4 ஆண்டு காலமும் எந்த திட்டமும் நிறைவேறாமல் வீணாகி விடக்கூடாது என்பதே எனது கவலை.

நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமரா? அல்லது இந்தி பேசும் மக்களுக்கு பிரதமரா? பிரதமர் 21 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு முறை கூட வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.