அபு அலா
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 163 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) மாலை சம்மாந்துறை மற்றும் அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதிகளாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் எம்.இர்சாட், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசித் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில், பொத்துவில் பிரதேச சபையில் கடமையாற்றிய – 15 பேருக்கும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் – 20 பேரும், சம்மாந்துறை பிரதேச சபையில் – 34 பேரும், கல்முனை மாநகர சபையில் – 19 பேரும், நிந்தவூர் பிரதேச சபையில் – 12 பேரும், காரைதீவு பிரதேச சபையில் – 18 பேரும் இந்த நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை அம்பாறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாநகர சபையிலிருந்து – 21 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச சபையில் – 06 பேரும், திருக்கோவில் பிரதேச சபையில் – 10 பேரும், மகஓய மற்றும், லாகுகல பிரதேச சபையில் – தலா 02 பேர் வீதமும், பதியத்தளாவ, நாமல் ஓய, உகண மற்றும் இறக்காமம் பிரதேச சபையிலிருந்து தலா – 01 பேர் வீதம் இந்த நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.