பதவிகள், விசாரணை அறிக்கைகள், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரத்து !

parliament

 பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள​தை அடுத்து மத்திய வங்கி ஆளுநர் தொடர்பிலான விசாரணை அறிக்கை மற்றும் நிதியமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியன இரத்தாகியுள்ளன.

இதுதவிர, ஏனைய அனைத்து பாராளுமன்ற செயற்குழுக்கள் மற்றும் உப குழுக்கள் வலுவிழந்துள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல சட்டமூலங்கள், பிரேரணைகள் மற்றும் வினாக்கள் இரத்தாவதாகவும் பாராளுமன்ற பிரதி செயலாளர்
நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தவிர, பாராளுமன்ற பதவிகளான சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சி – எதிர்கட்சி அமைப்பாளர்கள் அனைத்தும் இரத்தாகியுள்ளன.

இதன் பிரகாரம், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான ஏழாவது பாராளுமன்றம் நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

ஆயினும், தற்போதுள்ள அமைச்சரவை அவ்வாறே நடைமுறையில் உள்ளதுடன், இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.