இளைஞர் சமுதாயத்தின் தெளிவான சிந்தனையும் ஆற்றலுமே நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்லும். இலங்கையில் இளைஞர் சமூகம் மிகச்சரியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண் டும் என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார்.
இலங்கை இன்று சரியானதொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதே போல் பசுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“அறிவுப் பொருளாதாரத்தில் சக்தி சவா ல்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று பாடசாலை மாணவர்களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சந்தித்தார்.
இந் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இளைஞர் சமூகம் சரியான தலைமைத்துவத்தை கையில் எடுக்க வேண்டும். எமது வாழ்க்கையில் மனிதனது தன்மைகள் நான்கு வகைகளாக பகுக்கப்படுகின்றது. அதில் சிறுவர் பராயம், இளம் பராயம், வளர்ந்தோர் பரா யம், தலைமைத்துவ பராயம் என்பனவே அவையாகும்.
இந்த நான்கு தன்மையில் முன்னைய மூன்று நிலையிலும் ஒருவர் தனக்கான உரிமைகளையும் சலுகைகளையும் கேட்பவராக மட்டுமே வாழ்கின்றார். சிறுவர் பராயம் தனக்கானதை தா என்று கேட்கின்றது. இளம் பராயம் தன்னை அனைத்து கட்டுப்பாட்டில் இருந்தும் விடுவிக்கக் கேட்கின்றது. வளர்ந்தோர் பராயத்தினர் தமது சுயநல மற்றும் தனிப்பட்ட நோக்கங்களை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும் என்பதையே சிறந்த தலைமைத்துவம் கேட்கின்றது. ஆகவே அனைவரும் தமது இளம் பராயத்தை சிறந்த கல்வியினூடாக வளப்படுத்தி இந்த சமூகத்துக்கு என்ன செய்யவேண்டும், என்னால் இந்த சமூகத்துக்கு எவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
நான் என்ற சுயநலம் மிகவும் ஆபத்தானது. நான் எவற்றை எடுக்க வேண்டும் என்பதை விடவும் என்னால் இந்த சமூகத்துக்கு எவற்றை வழங்க முடியும் என்பது மிக முக்கியமான தலைமைத்துவ பண்பாகும். அதை ஒவ்வொரு மாணவரும் ஆரம்பக் கல்வியில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
”பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணிபென்ப நாட்டில் வைந்து “ என்று திருக்குறளில் ஒரு குறள் உள்ளது. இந்தக் குறளானது ஒரு நாட்டின் நிலைமையினையும் மக்களின் நிலைமையையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்கான உயர் பொருளாதார வளர்ச்சி, வளங்களின் பாதுகாப்பு, தூய்மையான சுகாதார பாதுகாப்பு ஆகியவை ஒரு நாட்டில் மிகவும் அத்தியாவசியமானவையாகும். ஒவ்வொரு நாடும் இந்தப் பண்பில் இருந்து விடுபடக் கூடாது. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தக் குறள் பொருந்தும்.
அதேபோல் எமது வாழ்வில் சரியான வழிநடத்தல் அமைய வேண்டும். எமது சிறந்த வழிகாட்டியாக முக்கியமான மூவர் உள்ளனர். எமது தாய், தந்தை, ஆரம்பக் கல்வி ஆசிரியர். இவர்கள் மூவருமே எமது சிறந்த வழிகாட்டியாவர்.
அதேபோல் இளைஞர் சமுதாயம் அறிவான வழிகாட்டலில் வளர வேண்டும். ஒரு நாட்டின் இளம் சமுதாயத்தினால் தான் நாட்டை சரியான முறையில் கட்டியெழுப்ப முடியும். இளம் சமூகத்தின் சிந்தனையும் அவர்களது கடுமையான உழைப்புமே இந்த உலகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் இளைய சமுதாயமும் இந்தப் பட்டியலில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
சூரிய கலம் நூறு வீத பாதுகாப்பானது. நவீன கால கட்டத்துக்கு இது மிகவும் முக்கியமானது. சூரிய சக்தி மூலமான வளங்களில் பகிர்வே எதிர்கால நாட்டின் பாதுகாப்புக்கு மிகச்சிறந்த தீர்வு என நன் நம்புகின்றேன்.
இலங்கை இன்று சரியானதொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மீள் சுழற்சி வலப் பாவனை பற்றி அரசாங்கம் சிந்திக்க ஆரம்பித்துள்ளது. பசுமையான நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும். ஆகவே அனைவரும் சூரிய கல வளபாவனையினை பயன்படுத்த வேண்டும். இலங்கையில் ஒவ்வொரு கூரைக்கும் ஒரு சூரிய கலம் என்ற ரீதியில் பயன்படுத்தப்பட்டால் பசுமையான இலங்கையை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.
அதேபோல்இலங்கையின் போக்கு வரத்து முறைமையில் அக்கறையுடன் செயற்பட வேண்டும். இன்று எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளது. இந்த நிலைமையினை கட்டுப்படுத்தி அடுத்த 10ஆண்டு கால இடைவெளியில் உலகில் பெட்ரோல், டீசல் எண்ணெய் இல்லாது சூரிய கலம், உயிரியல் எரிவாயு, மின் சக்தியால் இயங்கக்கூடிய வாகனப் பாவனை வந்துவிடும் . ஆகவே உலகம் அவ்வாறானதொரு தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அதுவே இயற்கைப் பாதுகாப்புக்கும் சிறந்த தீர்வாகும். அதேபோல் மீள் சுழற்சி மிக முக்கிய செயற்பாடாகும். இயற்கை வளங்களை பாதுகாப்பதில் இது மிகவும் நல்லதொரு தீர்வாக்கும்.