எம்.வை.அமீர்
(2015-06-26) மாலை கல்முனை தரவை பிள்ளையார் ஆலய சுவர்களில் உள்ள சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. உடனடியாக இஸ்தலத்துக்கு விரைந்த கல்முனைப் பொலிசார் ஆலயத்தின் குருக்களான சஜீவ குருக்கள் இனம்காட்டிய ஒருவரை கைது செய்துள்ளனர். சிலைகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் இனம்தெரியாத நபர் சித்த சுவாதீனம் அற்றவர் போல் தெரிவதாகவும் ஆலயத்தின் குருக்களான சஜீவ குருக்கள் எங்களது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
சிலைகளுக்கு சேதம் விளைவித்திருப்பது தொடர்பில் குழுமியிருந்த முஸ்லிம் சமூகத்தினர் சார்பானவர்களிடம் வினவியபோது இவ்வாறன செயல்களை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் சம்மந்தப்பட்டவர் யாராகினும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஏ.அமர்தலிங்கம் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது சிலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது குறித்து வேதனைப்படுவதாகவும் இவ்வாறான செயல்கள் தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்துவிடக்கூடாது என்றும் குற்றத்தில் சம்மந்தப்பட்ட எவராகிலும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு விசாரிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அமைதியற்ற நிலையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த பொலிசார் கல்முனை தரவை பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம் விளவிக்கபட்டதாக ஆலய குருக்களால் அடையாளம் காட்டப்பட்ட இனம் தெரியாத நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.