ராஜித சேனாரட்ன விடுத்துள்ள சொல்லம்பு , பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான வில்லம்புகளைவிடவும் விஷமத் தனமானவை : வேதாந்தி சேகு இஸ்ஸதீன் !

11229282_376469375884169_3219578402386954001_n_Fotor_Fotor

 ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள சொல்லம்பு, பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான வில்லம்புகளைவிடவும் விஷமத் தனமானவை, என்று முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

 விசேடமாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது,

 அவற்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நேற்று 25.06.2015 தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன, முஸ்லிம்களின் முக்கிய அரசியல் தலைவரும், சிறந்த வணக்கவாளியுமான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதிப் பதவிக்காக தமது மதத்தையே மாற்றிக் கொள்ளவார் என்று வலிந்துரைத்திருப்பது ரொம்ப அபத்தமானதும், ஆபாசமானதும் முஸ்லிம்கள் தம்புனித இஸ்லாம் மதம் மீது வைத்திருக்கும் ஈடு இணையற்ற விசுவாசத்தை எள்ளி நகையாடி இளக்காரப்படுத்துவதாகவும் இருப்பதுடன் ராஜித மீது முஸ்லிம்கள் இதுகாலவரை வைத்திருந்த விசேட அபிமானத்தையும், கௌரவத்தையும் பொடி சூரணஞ் செய்து துடைந்தெறிந்துள்ளதை அவருக்கு மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்க வேண்டியயிருக்கிறது.

 காழ்ப்புணர்ச்சி காரணமாக முஸ்லிம் மத கலாசார விசுவாசங்கள், விழுமியங்களை ஏப்பமிடப்பார்க்கும் வெறிபிடித்தலையும் சிங்கள இனவாதக் கும்பல்களின் இதுகாலவரையிலான அத்துமீறல்கள், ஆக்கிரமங்கள், அடாவடித்தனங்கள் அத்தனைக்கும் மகுடம் சூட்டினாற்போல் இந்த நாட்டின் கண்ணிய மிக்க ஒரு பெரும் முஸ்லிம் தலைவரின் மத விசுவாசத்தை பதவிக்கான ஒரு பண்ட மாற்றுப் பொருளாக மலினப்படுத்திக் காட்டி அமைச்சர் ராஜித விடுத்திருக்கும் சொல்லம்பு நல்லாட்சியின் கண்ணைக் குறிவைத்து ஏவிவிடப்பட்டுள்ள ஒரு விஷம் தோய்ந்த வில்லம்பு என்பதை ராஜித அறிந்து கொள்ள அதிக நாள் பிடிக்காது.

 இறைவனால் அருளப்பட்ட மதமொன்றின் வழி நடப்பவராய் அமைச்சர் ராஜிதவுக்கு இருக்கக் கிடைத்திருக்குமானால் முஸ்லிம்களின் மத நம்பிக்கையைப் பற்றிய அண்ணளவாகவேனும் அவரால்; அறிய முடிந்திருக்கும்.

 இந்த புனித நோன்பு காலத்தின் மகிமையைக் கூடக் கருத்திற்கெடாது, முஸ்லிம்களின் தலைவர் ஒருவரின் மத நம்பிக்கையைக் காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் அமைச்சரவைப் பேச்சாளரின் செயல் முழு முஸ்லிம்களையும் அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடப் போதுமானது ஆவதற்கு அதிக ஆயத்தங்கள் தேவைப்படா.

 அமைச்சர் றஊப் ஹக்கீமிடம் விசேடமாகவும், முழு முஸ்லிம் சமுகத்திடம் குறிப்பாகவும் பகிரங்கப் பொது மன்னிப்புகேட்டு தம் பாவங்களை களுவிக் கொள்ளுமாறு அமைச்சர் ராஜிதவுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

 ஒரு சிறந்த பண்பாளரான நண்பரான அரசியல் வாதியான அமைச்சர் ராஜிதவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.