சிலர் இரட்டை வாக்குச் சீட்டை க் கேட்கின்றார்கள், இது கட்சிகளைப் பாதுகாப்பதற்கு சில வேளைகளில் உதவியாக இருக்குமே தவிர, சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கமுடியாது : அதாஉல்லா !

11021052_806025016138936_8010953012116396687_n_Fotor
-பாராளுமன்றத்தில் அதாவுல்லா ஆற்றிய உரை-
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்.
நஹ்மதுஹு வனுஸல்லீ அலா ரஸுலில் கரீம்.
 

 குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றார்களே தவிர, எங்களைப் பொறுத்தவரையில்  இதனைச் சரியாக விளங்கியவர்கள் அல்லது சரியாகச் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள்.

 மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதற்கு முதலிலே, தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றம் கொண்டுவருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு சிறுபான்மை மக்கள் ஒரு நாளுமே உடன்படமுடியாது.
 சிறுபான்மை மக்களுக்கு இந்த நாட்டிலே ஒரேயொரு தலைமைத்துவம்தான் வேண்டும். இரண்டு தலைவர்களும் அதிகாரங்களை வெவ்வேறு இடங்களில் வைத்துக்கொண்டிருப்பதால், இந்த நாட்டிலுள்ள எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது. ஆகவே, அதற்கு நாங்கள் உடன்படவில்லை. இருந்தாலும், நல்லவேளை 19ஆவது திருத்தத்தின்போது இலங்கையின் அதியுயர் நீதிமன்றம் சில வரையறைகளைக் கொடுத்ததனால், அந்த அதிகாரங்களில் அதிகமானவை ஜனாதிபதியிடத்திலேயே இருக்கின்றன. அதனால், நாங்கள் திருப்தியடைகின்றோம். 

அதேபோன்று தேர்தல் முறைமை மாற்றப்படும் என்று கூறியபொழுது, அது எவ்வாறு மாற்றப்படும் என்பதற்கு வரைவிலக்கணம் இல்லாமலும் அதை விளங்கிக்கொள்ளாமலும்தான்  மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்று வாக்களிப்பதற்கு முனைப்பாகச் செயற்பட்ட அமைச்சர் றவூப் ஹக்கீம் போன்றோர், இப்பொழுது இங்கு வந்து பாராளுமன்றத்திலே அழுகுரலிலே பேசுகிறார்கள். தாங்கள் நீதிமன்றத்துக்குப் போகப்போவதாகவும் சொல்லுகின்றார்கள்.

 இவர்கள் பஸ்ஸை விட்டுவிட்டு ஏன் கையைக் காட்டுகின்றார்கள்? என்று எனக்குப் புரியவில்லை. இவர்கள் தீர்மானம் எடுப்பதற்கு முதல் இது பற்றிப் பேசியிருக்க வேண்டும். இந்தப் பாராளுமன்றத்திலே வந்து சொல்லியிருக்கிறார், “நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய அரசாங்கத்திலே எல்லா விடயங்களையும் பற்றி விவாதித்தும் கதைத்துமிருக்கிறோம்; விவாதிப்பதற்கும் கதைப்பதற்குமான சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது; ஆனால், இந்தக் Cabinetஇலே எங்களால் விவாதிக்கவோ பேசவோ முடியவில்லை” என்று.
 இதனைக் கேட்கின்றவர்கள் எல்லோருக்கும் வெட்கமாக இருக்கின்றது. அவர்கள் இவ்வாறானதொரு நிலைமைக்கு வரமுடியாது. மக்களை வாக்களிக்க வைத்துவிட்டு, இப்போது அவர்கள் ஒரே அமைச்சரவையில் – Cabinetஇல் கூட்டுப்பொறுப்பாக இருந்துகொண்டு இங்குவந்து “எங்களால் அங்கு பேசமுடியாது” என்று சொல்லுவதை மிகவும் கேலிக்கூத்தான ஒரு விடயமாகவே நாங்கள் பார்க்கிறோம். இது பிழையான ஒரு விடயம். எந்த விடயமாக இருந்தாலும் அது பாராளுமன்றத்தில் மாத்திரமல்ல, அமைச்சரவையிலும் பேசித் தீர்க்கக்கூடியதாக இருக்கவேண்டும். இங்கே 20ஆவது திருத்தத்தைப் பற்றிப் பேசுகின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பற்றிப் பேசுகிறார்கள். 

சிலர் double ballot paperஐக் கேட்கின்றார்கள். இது கட்சிகளைப் பாதுகாப்பதற்கு சில வேளைகளில் உதவியாக இருக்குமே தவிர, சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கமுடியாது. உதாரணமாக சிறுபான்மை மக்கள் வாழுகின்ற ஒரு மாவட்டத்திலே,  ஒரு கட்சி போட்டியிடுகின்றபோது அவர்களுக்கு இரண்டு ballot paper கொடுக்கப்படும். அவ்வாறு சிறுபான்மைக் கட்சிகள் 3 – 4 போட்டியிடுகின்றபோது, அங்கு அவர்களுக்கு இருக்கின்ற பிரதிநிதித்துவம்கூட இல்லாமல் போய்விடும்.

 நாங்கள் கேட்பதெல்லாம், நாட்டிலே வாழுகின்ற மக்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் தொகுதிகளை அதிகரியுங்கள் என்றுதான். அதன்மூலம் இந்த நாட்டில் தமிழ் மக்கள் இத்தனைத் தொகுதிகளிலே வரமுடியும்; முஸ்லிம் மக்கள் இத்தனை தொகுதிகளிலே வரமுடியும் என்கின்ற ஒரு வரையறையை திட்டவட்டமாகத் தீர்மானியுங்கள்! அது முடியாமல் இல்லை.
 அப்படிச் செய்வதன்மூலம் எஸ்.பி. திசாநாயக்க அவர்கள் சொன்னதுபோன்று இங்கே மீண்டும் குலவாதம், இனவாதம் வருவதற்கு எந்தவிதமான ஒரு தேவையும் இருக்காது. நாங்கள் எல்லாவற்றிலும் விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். பாருங்கள்!  இப்போது இருக்கின்ற160 தொகுதிகளை இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் உட்பட  165 அல்லது 168 ஆக அதிகரிப்போமென்று  SLFP ஆரம்பத்தில்  பேசியது.

. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற வேலையைப் பிரதமர் அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார். உண்மையிலே பிரச்சினை தீரவேண்டுமென்றால் தொகுதிகளைக் கூட்டுங்கள். ஏன், பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் முடியாமல் இருக்கின்றது? அவருக்கு இந்த நாட்டில் பிரச்சினை தீரக்கூடாது. பிரச்சினையைத் தீர்த்தவரும் அவரல்ல. இந்த நாட்டில் ஒரு காலத்திலும் பிரச்சினையைத் தீர்த்தவர் அவரல்ல. 

சிறிய கட்சிகள் சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக பாடுபட வேண்டுமேதவிர, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இங்குமங்கும் மாறி மாறித் தீர்மானங்களை எடுப்பது முறையானதல்ல என்பதையும் இந்த இடத்திலே கூறிக்கொண்டு, விடை பெறுகின்றேன். 
நன்றி.