அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமின் முயற்சியினால் கிழக்கு மாகான சபை ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் மூலமே இம்மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான ஆரம்பக் கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக முதல்வர் நிஸாம் காரியப்பர், அதிகாரிகள் சகிதம் இன்று வியாழக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இம்மைதான அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உத்தேச வேலைகள் பற்றிய மதிப்பீடுகளையும் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட முதல்வர், இத்திட்டத்தை கூடிய விரைவில் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார்.
இம்மைதான அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கல்முனை முதல்வர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.