20ஆவது திருத்தம் நிறைவேற்றுவதற்கு பொருத்தமற்ற காலமே தற்போதுள்ளது : தயான் !

DJ4112

 தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமற்ற காலப்பகுதியே தற்போது காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் ஒன்றை அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் தமது பிரதிநிதித்துவங்களை மட்டுமே கருத்தில் கொள்வதால் பொது உடன்பாட்டிற்கு அரசியல் கட்சிகள் வரமுடியாத நிலையில் இருப்பதே யதார்த்தமாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் சிறுபான்மை, சிறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெ ளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
 புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்து ஆறுமாதங்கள் கடந்துவிட்டன 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை அவர்களால் அந்த கால வரையறைக்குள் நிறைவேற்ற முடியாது போயுள்ளது. இவ்வாறான நிலையில் 100 நாள் வேலைத்திட்டம் நிறைவடைந்ததும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றே உறுதியளித்திருந்தார்கள். ஆனால் தற்போது வரை அவ்விடயம் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க முடியாது இருக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் சிறு பான்மையாக காணப்படும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் தொடர்ந்தும் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது ஆகவே பொதுத்தேர்தல் ஒன்றுக்கு உடனடியாக செல்லவேண்டியது அவசியமாகும். 

இவ்வாறான நிலையில் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றியபின் தேர்தலை நடத்தலாம் என கூறுவது பொருத்தமற்றதாகும். காரணம் அடுத்து பொதுத்தேர்தல் இடம்பெறவிருப்பதால் பிரதான கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமது பிரதநிதித்துவங்களை பாராளுமன்றத்தில் அதிகரிப்பதற்குரிய வகையிலான யோசனைகளையே முன்வைப்பார்கள் இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரும் தமக்கு சாதகமான யோசனைகளை முன்மொழிவதால் பொது இணக்கப்பாடொன்றுக்கு வர முடியாத நிலை நீடிக்கின்றது.

இதுவே யதார்த்தமாக இருக்கையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு சென்றபின்னர் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் 20ஆவது திருத்தம் தொடர்பில் பூரணமான ஆய்வொன்றை மேற்கொண்டு இறுதி முடிவுகளை எடுப்பதே சிறந்ததாகும். 

19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிப்பதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கவேண்டும் அல்லது இல்லாதொழிக்கவேண்டும் என்ற பொது நிலைப்பாடொன்று இருந்தது அதில் கூட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 

ஆனால் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான கட்சிகளின் நிலைப்பாடுகள் முன்னுக்குப் பின் முரனாகவே உள்ளன. தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றபோதே இச்சட்டமூலத்தை நிறைவேற்றலாம் என கூறுவது ஒருபுறத்தில் நியாயமாக இருக்கின்றபோதும் அதற்கான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார்கள். குறிப்பாக 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் பொது இணக்கப்படாட்டிற்கு வருவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 100 நாள் கால எல்லையையும் தாண்டவேண்டியிருந்தது. அதனை கருத்திற்கொண்டு 19, 20 ஆவது சட்டமூலங்களை ஒரே நேரத்தில் சமர்ப்பித்திருந்தால் இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.