பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஆட்சி உருவாவது நிச்சயம். இதனை எவராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வேண்டிய நிலைமை மஹிந்தவுக்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரக் கட்சியில் அல்லாது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே பிரதமர் வேட்பாளராக மஹிந்த களமிறங்க வேண்டிய அவசியம் கிடையாது. அக் கட்சிகளில் வேட்பு மனு வழங்கப்படாவிட்டால் எத்தனையோ அரசியல் கட்சிகளது அரசியல் சின்னங்களின் கீழ் மஹிந்தவை போட்டியிடச் செய்வதற்கு தயாராகவே உள்ளன.
இவ்வாறு ஒரு கட்சியில் கூட்டணியாக இணைந்து மகிந்தவை தலைமைத்துவ வேட்பாளராக களமிறங்கி பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம். இதன் போது நிச்சயம் மஹிந்த ராஜபக்ஷவெற்றி பெறுவார்.
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஹவே ஆகும். இதனை எவராலும் தடுக்க முடியாது. பொதுத் தேர்தலில் எமது பிரதான எதிரி ஐ.தே கட்சியாகும். அதற்கு எதிராகவே எமது தேர்தல் பிரச்சார வியூகம் அமைக்கப்படும். அதேவேளை ஐ.தே. கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும்.
அவ்வாறானதோர் நிலையில் நாம் ஏனைய கட்சியினரோடு இணைந்து கூட்டரசாங்கத்தை அமைக்க முயற்சிப்போம் என்றும் வாசுதேச நாணயக்கார எம்.பி தெரிவித்தார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கான அணி தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும். அது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனமும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.