எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது !

Unknown

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை மாதமும் மேற்கொள்ளப்படும் இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் ஒத்துழைத்துள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்தவருடத்தைவிட இவ்வருடம் பஸ் சேவையை நடத்துவதற்கான செலவு 0.03 சதவீதத்தின் அடிப்படையில் குறைந்துள்ளமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோமீற்றர் சேவையை நடத்த இப்போது 89.97 ரூபா செலவாகின்றது. கடந்த வருடம் பஸ் கட்டணங்கள் அதிகரித்தபோது இருந்தச்செலவு 89.99 ரூபாவாக இருந்தது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.

அத்துடன் குத்தகை வட்டி, திருத்தவேலைகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளும் குறைந்துள்ளன. எனவே பஸ் கட்டணங்களை தற்போது அதிகரிக்க வேண்டியதேவை இல்லை எனவும் அவர் கூறினார்.
பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.