வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் தற்போதைய பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்துமாறு நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்கு முழுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றார். இதனை நாம் ஒரு போதும் ஏற்கமாட்டோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அதற்கெதிராக நாம் நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டில் மிக நெருக்கடியான நிலையொன்று கடந்த காலங்களில் காணப்பட்டது. இன்று அவ்வாறான நிலைமை மாற்றமேற்பட்டு நாடு ஜனநாயகப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் அதனை முழுமையாகக் குழப்பி மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கொடிய ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடமளிக்கும் செயற்பாடுகளை ஒரு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையும் ஒன்றிணைப்பதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாடானது சிறுபான்மை கட்சிகளுக்கும் எமக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலில் பிரவேசித்து இருண்ட யுகத்தை ஏற்படுத்துவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. அதற்கெதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.
20ஆவது திருத்தச் சட்டமூலம்
தற்பொழுது தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும் சிறுபான்மை மற்றும் சிறு அரசியற் கட்சிகளின் முழுமையான ஆதரவு அச் சட்டமூலத்திற்குக் கிடைக்கவில்லை.
குறிப்பாக பிரதிநிதித்துவங்களில் வீழ்ச்சி ஏற்படுகின்றமையை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
இருப்பினும் அவசரமாக பிரதான சிறுபான்மைக் கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்படாத திருத்தமொன்று கொண்டு வரப்படுவதானது ஜனநாயக விரோதச் செயலாகும். இப்பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறலாம் அல்லது நிறைவேறாமலும் போகலாம். எவ்வாறாயினும் வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் பாராளுமன்றத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. ஆகவே காலாவதியான பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் தேர்தலை நடாத்த வேண்டும். தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
சிறைக்கைதி விடுதலை
நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 312 தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்றம் கலைப்பதற்கு முன்னதாக விடுதலை செய்யவேண்டும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சிறுபான்மைமக்கள் தொடர்பில் பல்வேறு கவனங்களை செலுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தது. எனினும் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு, இராணுவ குவிப்பை அகற்றுதல், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களில் கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
முன்னர் ஜே.வி.பி. தரப்பினர் சிறைகளில் அடைக்கப்பட்டு அதன் பின்னர் பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். தற்பொழுது சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் சகோதரர்கள் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான குற்றங்களையும் மேற் கொள்ளவில்லை. ஆகவே அவர்க ளின் விடுதலை தொடர்பில் அரசா ங்கம் உரிய கவனம் செலுத்தி பொது மன்னிப்பளிக்க முன்வர வேண்டும்.
அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்பதனை அரசாங்கம் உணர்ந்து முன் மாதிரியாகச் செயற்படுவது அவசியம் என்றார்.இதற்காக எமது கட்சி தொட ர்ந்தும் குரல் எழுப்பும் அதேநேரம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உரிமைகளுக்காக செயற்படவுள்ளதா கவும் மேலும் குறிப்பிட்டார்