எ.எல்.நிப்ராஸ் கணித பாடத்தில் சில சமன்பாடுகளுக்கு இலகுவில் விடை கிடைத்துவிடும். சிலவற்றுக்கு பலமுறை செய்து பார்த்தாலும் விடை கிடைக்காது. மனக் கணக்குப் போட்டு விடை கிடைத்த சமன்பாடுகளும் உண்டு. கடைசிவரையும் விடைகிடைக்காது கைவிட்டவைகளும் உள்ளன. நேரத்தை வீணாக்கிய சமன்பாடுகளும் இருக்கின்றன, அரைவாசித்தூரம் வரை வந்து நகராமல் நின்ற சமன்பாடுகளும் இருக்கின்றன. கஷ்டப்படுமளவுக்கு புள்ளியை பெற்றுத் தராது என்று நினைத்தவைகளும், கணக்கை செய்துபார்க்கும் செய்வழி பகுதிகளிலேயே விடப்பட்ட சமன்பாடுகள் பற்றிய அனுபவமும் நமக்கிருக்கின்றது. 1455537ஸ்ரீ 237 என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலமும் ஒரு வகையான சமன்பாடு போல்தான் தெரிகின்றது. ஆனால் விடை காணும் முயற்சியில் மேலே குறிப்பிட்டவற்றில் எந்த வகையான ஒரு சமன்பாடாக இது அமையப் போகின்றது என்பதுதான் தெரியவில்லை. பகீரத பிரயத்தனம் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றாகும். எனவேதான் எப்பாடுபட்டாவது அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசாங்கமும் சுதந்திரக் எதிர்க்கட்சியும் முனைப்பாக இருக்கின்றன. 20ஆவது திருத்தத்தத்தை கொண்டு வருவதிலும் பொதுத் தேர்தலை நடத்துவதிலும் பொதுவாக எல்லாக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் எவ்வாறான திருத்தங்களுடன் 20 இனை சட்டமாக்குவது என்பதிலும் பழைய முறைப்படியா அல்லது புதிய முறைப்படியா தேர்தலை நடத்துவது என்பதிலும் வாதப் பிரதிவாதங்களும் இழுபறிகளும் ஏற்பட்டிருக்கின்றன. உத்தேச திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் தொகுதிவாரியை முதன்மைப்படுத்திய தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் அதனால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்று ஆரம்பம் தொட்டே சிறுபான்மை கட்சிகள் கூறிவருகின்றன. இந்நிலையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் தெரிவு முறை சூத்திரத்திலும் சிறுபான்மை கட்சிகள் முழுமையாக திருப்தி கொள்ளவில்லை. தொகுதிவாரி முறையாயினும் தொகுதிவாரியை முதன்மைப்படுத்திய கலப்பு தேர்தல் முறையாக இருந்தாலும் கூட, அது சரியான முன்மொழிவுகளை கொண்டிராத பட்சத்தில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் வெகுவாக குறைவடையும் என்பதே சிறுபான்மை கட்சிகளின் அடிப்படை நிலைப்பாடாகும். நிறைவேற்று அதிகாரம் அற்ற ஒரு ஜனாதிபதியின் ஆட்சியில் பாராளுமன்ற அதிகாரமே மேலோங்கி இருக்கப் போகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் எந்த அடிப்படையிலேனும் குறைவடையுமாக இருந்தால், அம்மக்களுக்கு எதிர்காலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வரப்பிரசாதங்கள் எதுவும் கிடைக்காது விடும் அபாயம் இருக்கின்றது. எனவேதான், சிறுபான்மை மக்களுக்கு அநியாயம் இடம்பெறாதவகையில் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருமாறு அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. தமது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில் சிறு அரசியல் கட்சிகளும் இந்த அணியில் இணைந்திருக்கின்றன. ஆனால், தமக்கென்று எந்த அடையாளமும் இருக்காவிட்டால் கூட பரவாயில்லை நமக்கு எம்.பி. பதவி கிடைத்தால் போதும் என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும், பெரிய கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்வதன் மூலம் பாராளுமன்றத்திற்கு சென்றுவிடலாம் என்று எண்ணுகின்ற கட்சிகளும் இது விடயத்தில் பேசாமடந்தைகளாக இருக்கின்றன. இருப்பினும் லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தொடர்ச்சியாக 20ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்களையும் சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றன. சிறுபான்மை மக்களின் உறுப்புரிமையை பாதுகாக்கும் வகையில் தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படுவதுடன், இரட்டை அங்கத்தவர் தொகுதிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி இரட்டை வாக்குச்சீட்டை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மு.கா.உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் அரசாங்கத்தை கோரியிருந்தன. ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கும் வேட்பாளருக்கும் தனித்தனியாக வாக்களிக்க இந்த இரட்டை வாக்குச்சீட்டு ஏதுவாக அமையும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. 20ஆவது திருத்தத்தை உடன் அமுலுக்கு கொண்டுவருவது என்றும் பழைய விகிதாசார தேர்தல் முறைமையிலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது என்றும் அரசாங்கம் கூறிவருகின்றது. இருப்பினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னதாகவே நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அதாவது இந்த சட்டமூலத்தை சட்டமாக்காமல் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியமில்லை. திருப்தியற்ற வர்த்தமானி 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆட்சியில் தமிழ் கட்சி ஒன்று எதிர்க்கட்சியாக தெரிவு செய்யப்பட்டமையாலேயே தொகுதிவாரியான தேர்தல் முறைமை நீக்கப்பட்டு விகிதாசார முறைமை கொண்டு வரப்பட்டது என்பது நமக்குத் தெரிந்த வரலாறு. இப்போது மீண்டும் ஒரு மாற்றம் நிகழப் போகின்றது. இது, தொகுதிவாரியான தேர்தல் முறைமையை பிரதானமாகக் கொண்ட ஒரு கலப்பு தேர்தல் முறைமையாகும். அதாவது 145 பாராளுமன்ற உறுப்பினர்ககளை தொகுதி வாரியாகவும் 55 பேரை மாவட்ட விகிதாசார அடிப்படையிலும் 37 உறுப்பினர்களை தேசியப்பட்டியல் ரீதியாகவும் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதிலுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளும் சிறு கட்சிகளும் கடுமையான அதிருப்தியை வெளிட்டுள்ளன. தம்மால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாத பட்சத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்போவதாக பல கட்சிகள் முன்னமே எச்சரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதிய பகுதி 2 இற்கான குறைநிரப்பி என குறிப்பிட்டு அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம் என்ற விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 15ஆம் திகதி வெளியாகியுள்ளது. இதனால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறு அரசியல் கட்சிகள் அதிருப்தி என்ற நிலைமையையும் தாண்டி ஆட்சேபம் என்ற நிலைக்குச் சென்றுள்ளன. குறிப்பாக கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய இவ்வாறான கட்சிகள,் தம்முடைய கோரிக்கையை திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்துள்ளன. சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் புறந்தள்ளப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்னுமொரு தரப்பு மந்திராலோசனைன நடத்தி வருகின்றது. சிறுபான்மை மக்களின் உறுப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முற்போக்கு சக்திகள் உடன்பட்டிருந்தாலும் கூட பிரதான எதிர்க்கட்சியும் வேறு சில இனவாத போக்குடைய அரசியல் இயக்கங்களும் இதனை வேறு கோணத்தில் பார்க்கின்றன. இது அவர்களது வழமை. சிங்கள மக்களின் விடயங்களை பேசினால் அதனை நாட்டுப் பற்று என்று கூறுகின்ற அவர்கள், தமிழ் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிய கோரிக்கையை முன்வைத்தால் அதனை இனவாதம் என்றும் பிரிவினைவாதம் என்றும் வர்ணிப்பது இதுவொன்றும் புதிதல்லவே. 20ஆவது திருத்தம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளுக்கு இருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கியுள்ள வாக்குறுதிகளாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப க்ஷ்வின் நகர்வுகள், இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகள், கட்சிகளுக்கு உள்ளும் வெளியிலும் ஏற்பட்டுள்ள பிளவுகள், நம்பிக்கையில்லா பிரேரணைகள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமின்மை போன்ற பலவிதமான நெருக்குவாரங்களை இந்த அரசாங்கம் எதிர்கொண்டிருக்கின்றது. இந்த சூழலிலும் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்தில் உறுதியாக இருக்கின்ற போதிலும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதனையும் இத் திருத்தம் கொண்டிருக்காது என்று இரு தினங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி மைத்திரிபால கூறியிருக்கின்றார். இந்த வாக்குறுதியைத்தான் சிறுபான்மை சமூகங்கள் நம்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டில் இனவாதம் கோலோச்சிக் கொண்டிருந்த போது சாதாரண சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளாராக களமிறங்கினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு தெரிவிக்காமல் மைத்திரிக்கு ஆதரவளித்து, ஒருவேளை மஹிந்த வெற்றிபெற்றுவிட்டால் தமது கதை முடிந்துவிடும் என்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தெரிந்திருந்தது. இருப்பினும் தமது இருப்பை பணயம் வைத்து மைத்திரிபாலவை ஜனாதிபதி ஆக்கினார்கள். அவர் ஜனாதிபதியாக வந்தததால்தான் ரணிலின் பிரதமர் கனவும் பலித்தது என்பதை மறக்காமல் செயற்பட வேண்டும். மு.க.களின் நிலைப்பாடு ஆக அடுத்த சில மாதங்களுக்குள் சில விடயங்கள் நடக்கும் என்பது உறுதியாக தெரிகின்றது. குறிப்பாக உத்தேச 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், பாராளுமன்றம் கலைக்கப்படும், தேர்தல் நடைபெறும். இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட நிகழ்வுகள் என்ற போதும் சங்கிலித் தொடர்போல ஒன்றுக் கொன்று தொடர்புபட்டவையாகவே இருக்கும். அதாவது, எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய முறைப்படி நடத்துவது சாத்தியமில்லை. எல்லை மீள் நிர்ணயம், தொகுதிகளை வரையறுத்தல் மற்றும் மக்களை தெளிவுபடுத்துவதற்கு பல மாதங்கள் எடுக்கும் என்று தேர்தல் ஆணையாளரும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளும் கூறி வருகின்றனர். எனவே தற்போதிருக்கின்ற விகிதாசார முறைப்படியே அடுத்த பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அவ்வாறு நடைபெற்றாலும் எதிர்கால அரசியலை கருத்திற் கொண்டு புதிய தேர்தல் முறைமையின் தாக்கம் இத்தேர்தலிலும் மறைமுகமாக இருக்கக் கூடும். அதேவேளை, தற்போதிருக்கின்ற தொகுதிகளை வைத்துக் கொண்டு புதிய கலப்பு முறையில் தேர்தலை நடத்தமாட்டார்கள் என்று யாரும் உறுதியாக கூற முடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அவ்வாறு இருபதாவது திருத்தத்திற்கு அமைய தேர்தல் நடைபெற்றால் 1455537 ஸ்ரீ 237 என்ற சமன்பாடே பிரதியிடப்படும். 20ஆவது திருத்தத்தின் விடைகளே அடுத்த தேர்தலின் விடைகளை கண்டறிவதற்காக பாவிக்கப்படும் தெரியாக் கணியங்களாக இருக்கும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். புதிய தேர்தல் முறைப்படி தேர்தல் நடந்தாலும் பழைய முறைப்படி தேர்தல் நடைபெற்றாலும் அந்த தேர்தலை சிறுபான்மை கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது அடுத்த கேள்வியாகும். கொந்தராத்து வேலைகளிலும், இணைப்பாளர்களை நியமிப்பதிலும், காசு வருகின்ற வழிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்ற அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் புதிய தேர்தல் முறைமையின் கீழ் காணாமல் போய்விடுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. எனவே இப்போது எந்த முறையில் தேர்தல் இடம்பெற்றாலும், அடுத்த முறை நடைபெறப்பபோகின்ற புதிய கலப்பு முறை தேர்தலை இலக்காகக் கொண்டே முஸ்லிம் கட்சிகள் தம்முடைய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். வயல் வேலைக்கு ஆட்சேர்ப்பது போல வேட்பாளர்களை நிறுத்துவது இனியும் பலனளிக்காது. முஸ்லிம் அரசியலில் படித்தவர்கள், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், முற்போக்கு சிந்தனையுடையவர்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது. கட்சிக்காக பாடுபட்டவர்கள், தொண்டர்கள், போராளிகள் எல்லாம் கடைசிவரையும் போராளிகளாகவே இருக்க வேண்டும் என தலைவர்கள் நினைக்கின்றார்கள் போல் தெரிகின்றது. கடந்த 15 வருடங்களாக முஸ்லிம் அரசியலுக்குள் வந்த பலர் காசுக் காரர்களே. கட்சிக்கு பணம் செலவழிக்கின்றவர்களை, இன்னபிற வசதிகளை செய்து கொடுக்கின்றவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தும் ஒரு கேடுகெட்ட அரசியல் கலாசாரத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் வளர்த்துவிட்டிருக்கின்றார்கள். மக்களது பார்வையில் மிக மோசமான சில முஸ்லிம் அரசியல்வாதிகளை கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களாக நிறுத்திய சம்பவங்கள் பல தடவை இடம்பெற்றுள்ளன. ஆனால் இனி இந்த வழக்கத்தை மாற்றவேண்டும். புதிய தேர்தல் முறைமையின் கீழ் ஒரு தொகுதியில் அதிக மக்கள் செல்வாக்குள்ள ஓரிரு உறுப்பினர்களே தெரிவாகும் சாத்தியமிருக்கின்றது. இதனை அறிந்து வைத்துள்ள சில மூன்றாந்தர அரசியல்வாதிகள் மீதமுள்ள விகிதாசார முறைமையின் கீழ் அல்லது தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்றுவிடலாம் என்று மனக் கோட்டை கட்டுகின்றனர். குறுக்கு வழியில் சென்றேனும் பாராளுமன்றத்தை அடையலாம் என நினைக்கின்றார்கள். 20ஆவது திருத்தம் தொடர்பில் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்க இதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்ற பலர் மேற்சொன்ன வகுதிக்குள் வருபவர்களாகவே இருப்பர். இந்நிலைமை ஏற்பட கட்சித் தலைவர்கள் விடக் கூடாது. மிகச் சிறந்த ஆளுமைகளை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். பொது மக்கள் இது விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். புதிய தேர்தல் முறைமை என்பது அரசியலமைப்பை திருத்துவதாக மட்டுமன்றி அரசியலையும் திருத்துவதாக இருக்க வேண்டும். சமன்பாடுகள் சமப்படுவது மட்டுமன்றி, விடையும் திருப்தியாக இருக்க வேண்டும். வேறொன்றுமில்லை! |