முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ, அவருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவோ மாட்டாதென அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளமை உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, இக்குழுவில் அங்கம் வகிக்காதவர்கள் வெளியிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது எனவும் அவர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்படமாட்டார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று முன்தினம் வியாழக்கிழமை கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளதாகவும் இதனைத் தவிர அவருக்கு வழங்க நாட்டில் பதவிகள் இல்லை எனவும் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் அமைச்சர் ராஜித கூறியதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் கூறியது போல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.