அஸ்லம் எஸ்.மௌலானா
புனித ரமழான் நோன்பு காலத்தில் அதான், இகாமத், தொழுகை என்பனவற்றுக்காக ஒலிபெருக்கியை பாவிக்கும் அதேவேளை மார்க்கப் பிரசங்கம், ஹிஸ்புல் குர்ஆன் போன்ற விடயங்களுக்கு ஒலிபெருக்கிப் பாவனையை மட்டுப்படுத்தி, எச்சந்தர்ப்பத்திலும் ஏனையவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுமாறு முஸ்லிம்கள் அனைவரையும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்திக் கேட்டுள்ளது.
சாய்ந்தமருதில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் விசேட நிகழ்வு ஒன்றில் றமழான் வேண்டுகோள் எனும் பிரகடனம் வெளியிடப்பட்டது. இப்பிரகடனத்திலேயே மேற்படி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா பிரகடனத்தை வாசித்தார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ரமழான் 30 நாட்களும் காலை தொடக்கம் மாலை வரை முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் போன்றவை மூடப்பட்டு நோன்பின் மாண்பு பேணப்பட வேண்டும். இதற்காக பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும்.
றமழானை வரவேற்றும், அதன் சிறப்புக்களை விளக்கியும் வெள்ளிக்கிழமைகளில் குத்பாப் பேருரைகளை நிகழ்த்துவதுடன், விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பணிக்கு உலமாக்கள், பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இப்தார் நிகழ்வுகளில் பிறமத சகோதரர்களையும் கலந்து கொள்ளச் செய்து, நோன்பின் சிறப்புக்களை விஷேட உரைகளின் மூலம் அவர்களுக்கு புரியவைத்தல்.
நோன்பின் பிந்திய பத்து நாட்களில் கியாமுல்லைல் தொழுகையுடன் பள்ளியில் தரித்திருத்தலை ஊக்குவித்து, லைலத்துல் கத்ரின் பாக்கியம் கிட்ட சிரத்தையோடு ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
சஹர் மற்றும் இப்தார் வேளைகளில் ஊடகங்கள் மூலமான சமய சிந்தனை நிகழ்ச்சிகளின்போது உலமாக்கள் கால நேர சூழலை கருத்தில் கொள்வதுடன் மாற்றுமத சகோதரர்கள் அதனை விளங்கவும் வழி செய்தல்,
நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் இடம்பெறும் இரவு நேர வணக்கங்களில் பெண்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
ரமழான் மாத தலைப்பிறை மற்றும் நோன்புப் பெருநாள் ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கும் விடயத்தில் மஸ்ஜிதுகளை விழிப்பூட்டி ஒருமித்த நிலையில் அவற்றை அனுஷ்டிக்க அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினருடன் தொடர்பாடல்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்தல்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஏற்று, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அகீதா ரீதியான ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடல்.
மேட்படி விடயங்களை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் உலமாக்களும் புரிந்துணர்வுடன் செயற்படுதல் வேண்டும்.