‘ஜனாதிபதியை சந்திக்கவில்லை ‘-யாப்பா !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இதுவரையிலும் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் கருத்தை மறுத்துள்ளார். 

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்னும் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முதன்முறையாக இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பதற்கே திட்டமிட்டிருந்தது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அறுவர் அடங்கிய இந்த குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன்போது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளர் நிறுத்த வேண்டும். இல்லையேல் தேசிய பட்டியல் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை எம்.பியாக்கவேண்டும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அவருக்கு வேட்பு மனுவழங்க வேண்டும் என்று கோரியதாவும் அக்கோரிக்கையை முழுமையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துவிட்டார் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.