அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது தோணா புனரமைப்பு பணிகளை கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இன்று அங்கு சென்று பார்வையிட்டார்.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்தீன், எம்.எஸ்.உமர் அலி ஆகியோரும் இவ்விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.
நகர அபிவிருத்தி அமைச்சின் மூன்று கோடி ரூபா செலவிலான தோணா அபிவிருத்தி திட்டத்தின் முதற் கட்டப் பணிகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி நகர அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் தற்போது இத்தோனாவில் பற்றைக்காடாக வளர்ந்திருந்த சல்பீநியாக்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதுடன் தோனாவை சுத்தமாக்கும் பணிகள் முடிவுறும் கட்டத்திற்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேவேளை சாய்ந்தமருது தோனாவை நவீன முறையில் முழுமையாக அபிவிருத்தி செய்து அழகுபடுத்தும் திட்டத்திற்கு வெளிநாடுகளின் நிதி உதவிகளைப் பெறுவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்