புதிய அரசின் திறனற்ற செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரத்துறை யில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அரசிடம் போதியளவு நிதி இல்லை எனவும் விகாரை விகாரையாகச் சென்று பொய்பிரசாரங்களை மேற்கொண்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளவேண்டுமாயின் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்தார்.
அவ்வாறு விவாவதத்திற்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி உட்பட முன்னாள் அமைச்சர்கள் அச்சம் கொள்வார்களாயின் முன்னைய ஆட்சியின் கீழ் மேற்கொண்ட ஊழல் செயற்பாடுகள் உட்பட மக்களை ஏமாற்றும் நடவடிகைகளுக்கு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பில் அமைந்துள்ள நிதி அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி அமைச்சரும் ஜக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது நிதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
முன்னைய ஆட்சியில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே இன்றும் முன்னாள் ஜனாதிபதி உட்பட முன்னாள் அமைச்சர்கள் எதிர்வரும் பொது தோ்தலை இலக்காக கொண்டு எமது நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக போலியான பிரசாரங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களின் தொடர்ச்சியான கருத்தானது இந்த அரசிடம் அரச ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை வழங்கிடவும் நிதி இல்லை. எமது பொருளாதாரமானது தற்போது எல்லா வழிகளிலும் ஸ்திரதன்மையை இழந்து வீழ்ச்சி பாதையை நோக்கி செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடளாவிய ரீதியில் காணப்படும் புனித தன்மையுடைய விகாரைகளில் பொய்பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை முன்னாள் அமைச்சர்கள், எதிர்கட்சியினரும் இதனையே தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்தில் மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் பொருளாதார வளர்ச்சியானது 6.4 வீதமாக காணப்படுகிறது முன்னைய ஆட்சியின் கீழ் எமது பொருளாதாரம் வீழ்ச்சி நிலையை அடைந்து காணப்பட்ட நிலையிலேயே இன்று புதிய அரசின் கீழ் நாம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி உள்ளோம்.
எமது நாட்டின் பொளாதாரத்தின் நிலைமை தொடர்பில் பொய்பிரச்சாரங்ளை முன்னெடுத்து வரும் தரப்பினருக்கு நான் விளக்கமாக ஒன்றை கூற விரும்புகின்றேன் எமது பொருளாதாரத்தின் தற்போதய நிலை தொடர்பில் விளக்க வேண்டுமாயின் புதிய அரசின் நிதி அமைச்சர் என்ற வகையில் என்னுடன் பகிரங்க விவாத்திற்கு வருமாரு குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு விசேடமாக அழைப்பு விடுகின்றேன். அவருக்கு தனிமமையாக வருவதற்கு அச்சமாக இருப்பின் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட சில அமைச்சர்களை அழைத்து வருமாறு கேட்டு கொள்கின்றேன்.
எனது அழைப்புக்கு வர மறுத்தால் முன்னைய அரசின் மோசமான செயற்பாடுகள் மற்றும் பொய்பிரச்சாராங்கள் தொடர்பில் அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கோருங்கள்.
எமது புதிய அரசானது ஆட்சிபீடம் ஏறியபின்னர் மக்களுக்கான வரிசுமை குறைக்கப்பட்டு நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மைகேற்ப அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது எந்த ஒரு உதவிகளும் இன்றி ஊழியர்களுக்கான சம்பளம் நிலுவை இன்றி செலுத்தப்படுகிறது.
தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குறுகிய காலத்தில் செய்ய முடிந்தது. எமது அரசுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இதனை விமர்சிப்பதற்கோ போலியான பிரசாராங்களை மேற்கொள்வதற்கோ எதிர்கட்சி உட்பட எந்த ஒரு தரப்பினருக்கும் அதிகாரம் இல்லை.
கேள்வி: – 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?
பதில்: – மக்களின் நலனுக்காக முற்றுழுவதுமாக செயலாற்றும் எமது கட்சியானது எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகேற்றவாறே செயற்படும் அந்த வகையில் 20 ஆவது திருத்தத்தை எந்நேரத்திலும் நிறைவேற்ற நாம் தயாராகவே உள்ளோம்.ஒரு சிலரின் சுயநல செயற்பாடுகள் காரணமாக இவை இழுபறிநிலையில் உள்ளன.
கேள்வி: – பாராளுமன்றை கலைக்க முயன் றால் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவிப்பது தொடர் பில்?
பதில்: அவரின் கருத்து தொடர்பில் எனக்கு எந்த விமர்சனங்களை முன்வைக்க முடியாது.
கேள்வி:- அதிக கடன் சுமை நாட்டில் காணப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்-: நாட்டிற்கு தேவையான கடன் குறைந்த வட்டி வீதத்திலேயே பெறப்பட்டுள்ளது. அந்த கடன் அனைத்தும் முன்னைய அரசின் கீழ பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்திடவும் பொருளாதார தேவைக்குமே பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் கவலை கொள்ள வேண்டியது இல்லை.