தென்கொரியாவில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களையும் அந்த நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் மெர்ஸ் தொற்று (மத்திய கிழக்கு மூச்சுத்திணறல் நோய்) தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென் கொரியாவிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் அச்சமடையத் தேவையில்லை என வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ஏனெனில், மெர்ஸ் வைரஸ் பரம்பலை தடுப்பதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் தென்கொரிய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்ஸ் பீதி காரணமாக தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் தங்களது வேலைத்தளங்களை விட்டு இலங்கைக்கு வர முயற்சிக்க வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரள அறிவுறுத்தியுள்ளார். எப்போதும் முக்கவசத்தை அணிந்திருக்குமாறும் சனநெரிசல் மிகுந்த பகுதிகளில் இருக்கவேண்டாமெனவும் இலங்கைப்பணியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விலங்குகளை தொடவேண்டாமெனவும் குறிப்பாக ஒட்டக உற்பத்திப் பொருட்களான ஒட்டக இறைச்சி, ஒட்டகப்பால் என்பவற்றை உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.