ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
“பொதுபலசேனா போன்ற கடும்போக்கு இனவாத மதக்குழுவுடன் அவர்களது அநாகரிக செயற்பாடுகள் தொடர்பாக நேருக்கு நேர் தகுந்த பதில் கூறியவன் என்ற விதத்தில் இத்தகைய இனவாதிகளின் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அன்று பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். அன்று எனது வார்த்தைகளை அவர் செவிமடுத்திருந்தால் இன்றும் இந்நாட்டின் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷவே இருந்திருப்பார்.’
கலேவெல பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ரன்வெடியாவ கிராமத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட மஸ்ஜிதுல் ஹிமிர் ஜும்ஆப் பள்ளிவாசலின் திறப்பு விழா வைபவ நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்;
அன்று நான் தெரிவித்த கருத்துகள் இன்று உண்மையாகியுள்ளன. அன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்த பொதுபலசேனா அமைப்பின் பிக்கு ஒருவர் இன்று அதனிலும் பார்க்க மிகவும் மோசமான தூஷன வார்த்தைகளால் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவை தூஷித்து வருகின்றார்.
நாம் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருப்பினும், எந்த மத குல மற்றும் இனத்தவர்களாக இருப்பினும் நாம் அனைவரும் மனித இனத்தவர்களாவோம் என்பதை எவரும் மறந்திடலாகாது.
தற்போது நான் ஒரு தரகு வேலையில் ஈடுபட்டிருக்கின்றேன். இது ஒரு திருமணத் தரகு வேலையல்ல. ஜனாதிபதி மைத்திபாலவை தமது கட்சியுடன் இணைத்துக் கொண்டு அவர்களிடையே ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமெனவும் தெரிவித்தார்.