விருப்பு வாக்குமுறை மாற்றப்பட வேண்டும் : விஜித்த ஹேரத் !

Vijitha_Herath

விருப்பு வாக்குமுறை மாற்றப்பட வேண்டும் என சில சிறுக்கட்சிகள் நேற்று தீர்மானித்துள்ளன.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு கூட்டத்தின் போதே இவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

லங்கா சமசமாஜ கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகக் கட்சி, நவ சியல உறுமய, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் தற்போதுள்ள விருப்பு வாக்கு முறையை இல்லாது செய்து, தொகுதிக்கு பொறுப்பு கூறுகின்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்தல், தற்போதுள்ள தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சிறந்த அடையாளங்களை கொண்ட புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தல் ஆகிய நிலைப்பாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்துள்ளன எனத் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர்களுக்கு விரும்பிய கட்சிக்கு வாக்களித்தல் மற்றும் வேட்பாளருக்கு வாக்களித்தல் ஆகிய இரட்டை வாக்கு சீட்டு முறையை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அத்துடன், அனைத்து இன மக்களுடைய வாக்குரிமையை பாதுகாக்கும் வண்ணம் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண தற்போதுள்ள முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து தொகுதிகளிலும் இருந்து பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கூறினார். இதற்கு இரட்டை வாக்கு சீட்டு முறையே சிறந்ததாக அமையும் என கூறினார்.