வர்த்தகர்களின் பிரச்சினைக்கு உயர்மட்டக் குழு நியமனம்!

ஏ.எல்.றமீஸ்

அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்டுள்ள சந்தைக்கட்டிடம் மற்றும் மீன் மார்க்கட் ஆகியவை பாவனைக்கு உதவாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்டுள்ளதால், அவை பயன்படுத்தப்படாத நிலையில் மூடப்பட்டுள்ளன.அவற்றினை இயங்குவதற்குரிய வகையில் திருத்தங்களை மேற்கொண்டு தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் வேண்டுகோளுக்கு தீர்வு வழங்குவதற்கான உத்தியோகபூர்வ கூட்டம் அண்மையில் (10) கிழக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது..

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் சலீம், அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் இர்ஷாத், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் அஸ்மி, அக்கரைப்பற்று வர்த்தகசங்க பிரதிநிதிகள்,மீன் விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேற்படி கூட்டத்தில் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் மீன் விற்பனையாளர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்களையும் முதலமைச்சர் விலாவாரியாகக்  கேட்டறிந்து கொண்டார்.வர்த்தக சங்கத்தினர் சார்பில் கலந்து கொண்டோர்களில் ஏ.சி.ஏ.கபூர் மற்றும் ஏ.ஜீ.தாசீம்ஆகியோர் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சருக்கு பூரண விளக்கமளித்ததோடு, பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதேபோன்று,மீன் விற்பனையாளர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்களை அவர்களின் பிரதிநிதிகளான ஏ.எல்.நிசார் மற்றும் எம்.ஐ.சலாஹுடீன் ஆகியோர் விளக்கியதோடு, மாநகர சபையினரின் தலையீட்டால் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தடைகளையும், அன்றாடம் தங்களது தொழிலை கொண்டு நடாத்திய சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மீன் விற்பனையாளர்கள் தங்களது தொழிலை இழந்து தவிப்பதையும் எடுத்துக்கூறினர்.

அங்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தகர்களும் மீன் விற்பனையாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்படுத்தி மனிதாபிமான அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் விடயமாகப் பார்க்கப்படக்கூடாது. அக்கரைப்பற்று சந்தைத்தொகுதி 1985 களில் இனம் தெரியாத ஆயுதக்குழுக்களினால்முற்றாக எரிக்கப்பட்டதனாலும், 91 களில் குண்டு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டதனாலும் மிகப்பெரும் நஷ்டத்திற்கு முகங்கொடுத்து நிற்கின்ற வர்த்தகர்களுக்கு,பாவனைக்கு உதவாத சந்தைக் கட்டிடங்களால் மீண்டும் தங்களது வர்த்தகத்தை மேற்கொள்ளமுடியாமல் தடை ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஆதலால் அவசரமாக தகுந்த தீர்வினை வழங்க ஆவண செய்ய வேண்டுமெனவும் முதலமைச்சரை கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், தான் இவ்விடயத்தில் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பேன் எனவும், யாராக இருந்தாலும் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்ட விடயங்களை கிடப்பில் போட்டு காலத்தை இழுத்தடிக்க முடியாது எனவும், இது தொடர்பாக உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு வழங்கினார். அதன் பிரகாரம் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து உண்மை நிலையை வெளிக்கொணர்வதற்காக உயர்மட்டக்குழு ஒன்றை நியமித்ததோடு, இரண்டு வாரங்களுக்குள் தனக்கு அக்குழு பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.