ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின் ஜெனீவா சந்திப்பு!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமகால நிலையில்எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய விடயங்களான   *வடபுலத்தினை தாயகமாகக்கொண்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் காணி உரிமையும்,*தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக காவு கொள்ளப்படுகின்ற முஸ்லிம்களின் அரசியல் பிரதி நிதித்துவம் என்பன அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களினதும் அக்கறைக்குரிய அம்சங்களாக இன்று உள்ளது.

 இலங்கைக்கு வெளியில் வாழும்  இலங்கையை தாயகமாகக் கொண்ட முஸ்லிம்கள் இந்த நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கானநியாயமான  வழிவகைகள் குறித்து உரையாட  வேண்டி இருப்பதுடன் ,இந்த விடயங்களில்  அதிக கவனக் குவிப்பையும் தங்களால்முடிந்த பங்களிப்பையும் செய்ய வேண்டியது கடமையாகவும்  உள்ளது.

சமூக, அரசியல் , பண்பாட்டுத்தளத்தில் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி தீர்த்துக் கொள்வதற்கு முழு ஐரோப்பாவில் வாழும்இலங்கை முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளையும், சமூக நிறுவனங்களையும்,  புலமையாளர்களையும் , சமூக செயற்பாட்டாளர்களையும்ஒரு இடத்தில் கூட்டி கருத்துக்களை, ஆலோசனைகளை திரட்டிக் கொள்வதுடன் செயற்திட்டங்களையும் வரைவதற்கான  ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்திய கலந்துரையாடல் ஒன்றை Overseas Srilankan Muslim Organaisation (OSMO) எதிர்வரும் 27ம் திகதி ( 27/06/2015 சனிக்கிழமை ) ஏற்பாடு செய்துள்ளது. 

1990ம் ஆண்டு வடபுலத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் 24 மணி நேர அவகாசத்தில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபுலமுஸ்லிம்களின் மீள்குடியேற்றம் , அம்மக்களுக்கான நில உரிமை 25 வருடங்கள் கடந்த பின்னும் ஒரு கனவாகவும் பெரும் சவாலாகவுமேமாறி இருக்கிறது. 

யாழ்ப்பாணத்தில்  முஸ்லிம் மக்கள்  மீள்குடியேற்றப்படுவதில் தொடர்ந்தும் முட்டுக்கட்டைகள் இடப்படும் அதேநேரம் மன்னார் மாவட்டமக்களின் மீள் குடியேற்ற விவகாரத்தில் அரசாங்கத் தரப்பு இப்போது தடையாக மாறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்குநியாயம் வேண்டி இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் வெகுஜனத் தளத்தில் மக்கள் ஆதரவை திரட்டிக் கொள்வதற்கானகையெழுத்துப் பெறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதே வேளை தேர்தல்முறை  மாற்றம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை காவு கொள்ளும் வகையில்புதிய திருத்தங்கள்  முன் வைக்கப்பட்டு, அமைச்சரவைத் தீர்மானமும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய சீர்திருத்தத்தினால்அதிகளவு பாதிக்கப்படும் இனச் சமூகங்களாக இலங்கை முஸ்லிம்களும், மலையக மக்களுமே இருக்கப் போகின்றனர். வடக்குகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு இப்புதிய திருத்தம் ஒப்பீட்டு அளவில் ஒரளவு பாதிப்பினையே கொண்டுவரும். அத்துடன் சிறியகட்சிகள், மாற்று பாராளுமன்ற அரசியல் கட்சிகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட  அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும், சிறுபான்மை மக்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயக அமைப்புகளும் ஜே. வி.பி உட்பட தெற்கில் உள்ள அனைத்து இடதுசாரி அமைப்புகளும் இந்த தேர்தல் சீர்திருத்தத்தின்பாதிப்பு சிறுபான்மை மக்களினதும் ,சிறுகட்சிகளினதும் பாராளுமன்ற அரசியல் பிரதி நிதித்துவத்தினை பாதிக்கும் என சுட்டிக்காட்டியும், இலங்கை அரசாங்கம் இதனை சட்டமூலமாக்குவதில் மிக உறுதியாக இருந்து வருகிறது.

இப்படியான ஒரு நிலையில் இந்த இரு விடயங்களில் , புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம் சமுகத்தின் அரசியல், சமூகப்பாத்திரம் என்ன என்பது குறித்த உரையாடலில் தங்களின் நேரத்தினை ஒதுக்கி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.பங்குபற்றுனர்கள் நிகழ்வு அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

IV