அஸ்லம் எஸ்.மௌலானா
நாட்டுக்கும் சமூகத்திற்கும் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய மகளிர் ஷூரா சபை ஒன்றை உருவாக்குவதற்கு உத்தேசித்திருப்பதாக பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தருமான தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் தெரிவித்தார்.
சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் விடுதியில் நேற்று இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“பெண்களின் நலன்களை கருத்தில் கொண்டு கடந்த பல வருடங்களாக எமது பெண்கள் ஆராய்ச்சி செயல், முன்னணி, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இன்னும் பல திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கான ஆலோசனை, அறிவுரைகளை இப்போது சேகரித்து வருகின்றோம். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் சமூகத் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கின்றோம். பெண்களும் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதற்காக ஊழல் மோசடி நிறைந்துள்ள அரசியல் சாக்கடைக்குள் நமது பெண்களை தள்ளி விட முடியாது. பெண்களை அரசியலில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதையும் ஒரு முக்கிய வேலைத் திட்டமாக முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாக குறுக்கு வழியில் எதனையும் அடைந்து கொள்வதற்கு முயற்சிக்கக் கூடாது. நமது தகுதி, திறமைகள் மூலம் அவை எம்மைத் தேடி வர வேண்டும். தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவி விடயத்திலும் நான் அதனையே எதிர்பார்க்கின்றேன்.
எமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் பங்களிப்பு செய்வதற்காக தேசிய சூரா சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பெண்கள் இடம்பெறவில்லை. அறிவு மட்டத்தில் உயர்ந்த ஆண்கள் மாத்திரமே அதில் அங்கம் வகிக்கின்றனர். ஆகையினால் பெண்களும் அதற்கு தயார்படுத்தப்பட வேண்டும். அதனை இலக்காகக் கொண்டு தேசிய பெண்கள் சூரா சபை ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அது வெற்றியளிப்பதற்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.பாறூக், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எல்.எம்.இப்ராஹிம், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா உட்பட பலரும் கருத்து தெரிவித்தனர்.