கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு ரெதீதென்ன எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று மாலை மட்டக்களப்பு, பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான ரெதீதென்னையில் நடந்த சுயதொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்புகையில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
முன்னால் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் அப்போது மழைத்தூறல் காணப்பட்டதால் வீதியிலிருந்து வழுக்கி அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதியுள்ளது. அந்நேரம் அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த தாயும் மகளும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
புணாணைக் கிராமத்தைச் சேர்ந்த சாமித்தம்பி சறோசா (வயது 25) மற்றும் அவரது 6 மாதக் கைக் குழந்தையும் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனத்தில் பயணம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் (வயது 45) மற்றும் ஊடகப் பிரிவு படப்பிடிப்பாளர் ஏ.எம்.மஹ்சூம் (வயது 29) ஆகியோரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.