யாழில் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை அதிகரிக்காது உள்ளமை சிறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் !

caffe-jaffna-districtஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையின்  அனுமதி கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதும் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை அதிகரிக்காது உள்ளமை சிறுகட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. 

புதிய தேர்தல் முறைமையின் ஊடாக  யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும். நாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. 

சிறுகட்சிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் கட்டாயம் பாராளுமன்றில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என கபே இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 
இது தொடர்பில் கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விடுத்துள்ள அறிக்கையில், 

அரசயலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததை வரவேற்கிறோம். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 225ஆக வைத்துள்ளமை மற்றும் தொகுதிகளை 125ஆக குறைத்துள்ளமை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லிம் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையக கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்தமை இலங்கை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் படியாகும். ஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் நியாயம் வழங்க 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற  போதுமானதல்ல. தேர்தல் திருத்தத்திற்கு முதலாவதாக கொண்டுவரப்பட்ட யோசனையில் கூட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 234, 235 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் சிறு கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 125 தொகுதிகள் அடங்கிய 225 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் முறையில் பிரதான மூன்று பிரச்சினைகள் உள்ளன. 
முதலாவதாக தற்போதுள்ள தொகுதிகளை 125 தொகுதிகளாக மட்டுப்படுத்துவதற்கு கூடிய காலம் எடுக்கும். இரண்டாவதாக  சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவென போதியளவு பல் அங்கத்தவர் தொகுதி இல்லாத நிலை உள்ளது.  

மூன்றாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள பிரதிநிதித்துவம் (வவுனியா, சேருவில, அம்பாறை) மற்றும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அனைத்து தொகுதிகளிலும் உறுதி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.  

தேர்தல் நிருவாகத்தின் படி 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட 160 தொகுதிகளில் 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை தற்போதும் இருந்து வருகிறது. காலனித்துவத்தில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எல்லை நிர்ணயத்தின் போதும்  இலங்கையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  எனினும்  அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனையின் மூலம் 160 தொகுதிகளை 115-118 ஆக குறைக்க வேண்டும். (குறைந்தது 9 பல் அங்கத்தவர் தொகுதியேனும் இருக்க வேண்டும்) 

சரியாகச் சொல்வதாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தங்களது தொகுதி அமைப்பாளர்களை 40-45வரை குறைக்க நேரிடும். மாவட்ட அடிப்படையில் பதுளையில் உள்ள 9 தொகுதிகள் 6 தொகுதிகளாக குறைக்கப்படும். காலியில் 3 தொகுதிகள், மாத்தறையில் இரண்டு தொகுதிகள், குருநாகலில் 3 அல்லது 4 தொகுதிகளை குறைக்க நேரிடும். கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 2-4 தொகுதிகள் வரை குறைக்க வேண்டிவரும். யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும். நாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல. 

அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டியது அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகளின் பொறுப்பாகும். இல்லையேல் புதிய தேர்தல் முறையை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது போவதோடு, பழைய ஜனநாயகமற்ற தேர்தல் முறைமையே கடைபிடிக்க வேண்டிவரும். சா/த சித்தியடையாத 94 உறுப்பினர்கள், உ/த சித்தியடையாத 142 உறுப்பினர்கள் கொண்ட 5 வீத  மகளிர் அற்ற பாராளுமன்றை மீண்டும் உருவாகுவதை தடுக்க அமைச்சரவை யோசனை மாற்றியமைக்கப்பட வேண்டும்.