பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தைக் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதன்படி பார்க்கும்போது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்வரை நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த செயற்பாடுகள் இடம்பெறமாட்டாது என்றே தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து ஜனாதிபதி இந்த விடயம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு தற்போது அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தை கைவிடுமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த வௌ்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைமையில் மொத்தமாக 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மனுஷ்ய நாணயக்கார பந்துல குணவர்த்தன உள்ளிட்ட பலரே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டியிருந்தனர்.
பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை இவ்வாரம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடத்துமாறு பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னர் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதுவரை எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.