அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று (09) காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ் எர்னஸ்ட் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த போது அந்நாட்டு சட்ட அமுலாக்க பிரிவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பத்திரிகையாளர்களின் அறையில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த இரகசிய பிரிவு பொலிஸார், பத்திரிகையாளர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஈசன்ஹவர் கட்டிடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.
பின்னர் பத்திரிகையாளர்கள் அறை முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனையிடப்பட்டது. அதில் குண்டு எதுவும் இல்லாதது தெரியவந்ததும், அரை மணி நேரத்திற்கு பின் பத்திரிகையாளர்கள் மீண்டும் அவர்களின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சோதனைகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது, அமெரிக்க அதிபர் ஒபாமா, முதல் பெண்மணி மிட்செல் ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகைக்குள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.