[t;gh;fhd;
மறிச்சுக்கட்டி முஸ்லிம்களை தமது வாழ்விடங்களிலிருந்து விரட்ட இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் இனவாத நடவடிக்கையை தடுக்கு முகமாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது ,
புலிகளால் விரட்டப்பட்ட மன்னார் முஸ்லிம்களை தமது பாரம்பரிய பிரதேசங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடியேற்றினார். வட மாகாண முஸ்லிம்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அலட்சிய போக்கு காரணமாகவும் முஸ்லிம்களின் உரிமைக்குரல் என கூறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தும் இது பற்றி கொஞ்சமும் அக்கறை செலுத்தாததாலும் மன்னார் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் ஜமியதுல் உலமாவின் மறைமுக ஆதரவுடன் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் 95 வீத முஸ்லிம்களின் வாக்குகளால் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியில் முஸ்லிம் சமூகம் அதிகம் சந்தோசப்பட்டதால் நாமும் சமூகத்தின் அபிலாசைக்கு குறுக்கே நிற்க்கக்கூடாது என்ற நோக்கில் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருக்கு எமது ஆதரவையும் வழங்கினோம்.
ஆனால் புதிய அரசாங்கம் முஸ்லிம்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறை செலுத்தாமலும், அவர்களின் ஒரு உரிமையையேனும் வழங்காததை கண்ணுற்ற நாம் முஸ்லிம் சமூகம் சார்ந்து அரசை விமர்சிப்பது ஜனநாயக நாட்டில் கடமை என்பதால் அதனை செய்ய தொடங்கினோம். அத்தனை முஸ்லிம் கட்சிகளும் அரசுக்கு அடிமையாகியுள்ள நிலையில் உலமா கட்சி மட்டுமே சமூக பிரச்சினைகளை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் கிடைக்காத நிலையிலும் இருக்கின்ற சில உரிமைகளும் இந்த அரசால் பறிக்கப்படுவது கவலை தருகிறது. இதன் ஒரு கட்டமாகவே மறிச்சுக்கட்டி முஸ்லிம்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசத்திலிருந்து விரட்ட எடுக்கும் சதியாகும். இந்த சதிக்கு அரசும் துணை போவதாக தெரிகிறது.
ஆகவே ஜனாதிபதியை வெல்ல வைப்பதில் மறைமுகமாக செயற்பட்ட ஜமியதுல் உலமா இது விடயத்தில் தலையிட்டு ஜனாதிபதியை சந்தித்து மறிச்சுக்கட்டி முஸ்லிம்களைக் காக்க முன் வர வேண்டும். ஜனாதிபதியின் இஸ்லாமிய விவகாரங்களுக்குரிய ஆலோசகராக ஜமியதுல் உலமாவின் செயற்குழு உறுப்பினரே உள்ளதால் ஜனாதிபதியுடன் பேசி நல்லதோர் தீர்வுக்கு முன் வர உடனடியாக செயற்பட வேண்டும் என உலமா கட்சி வினயமாக கேட்டுக்கொள்கிறது.