‘அடுத்த ஜூன் மாதத்திற்கு முன் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ‘-சம்பந்தன்

SRI LANKA-POLITICS-ELECTIONதமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வொன்றை அடுத்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்  முன்வைக்கப்படுமென்று நாம் பூரணமாக நம்பலாம்.  புதிய   பாராளுமன்றத்துக்கு அந்த தீர்வை முன் வைப்பதற்குரிய எல்லா வகை யோசனைகளையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முன் வைக்க காத்திருக்கிறது. இவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இன்றைய அரசியல் சூழ்நிலையும் கொள்கை விளக்கமும் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை சில்வஸ்டர் ஹோட்டலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற போதே அதில் கலந்து  கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு அடங்கிய ஒப்பந்தங்களை பண்டா- செல்வா ஒப்பந்தம் 1957 செல்வா – டட்லி  ஒப்பந்தம், ,இலங்கை -இந்திய  ஒப்பந்தம் ஆகியன கொண்டு வரப்பட்ட போது சிங்கள பேரினவாதிகள் மாத்திரமல்ல தமிழ் தலைவர்களும் எதிர்த்தார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும்  டட்லி -செல்வா ஒப்பந்தத்தையும் சமஷ்டி கோரிக்கையையும் முன்னாள் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். இதன் காரணமாகவே தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தரமுடியவில்லை. இன்று அந்த நிலை இல்லையென்றே  சொல்ல வேண்டும். அதற்கு தற்போது இடமில்லை.

செப்டெம்பரில் அமையவிருக்கின்ற புதிய பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் முக்கியம் கொள்ளப்படும். எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்ற விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இது பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளோம். அழுத்தம் கொடுத்துள்ளோம்.  சர்வதேச  சமூகத்துடனும் இது பற்றி பேசி வந்திருக்கின்றோம். தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமாயின் தமிழ் மக்களுடைய குரல் ஒரே குரலாக பேச வேண்டும். ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் ஒருமித்த முடிவை தமிழ் மக்களாகிய நீங்கள் எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளும் இறைமையுள்ள தன்னாதிக்கமுள்ள சுதந்திரமான தீர்வொன்றை பெற வேண்டுமென்பதற்காகவே நாம் போராடி வருகிறோம். மிக விரைவில் எம்மால் கொண்டு வரப்படவிருக்கின்ற  தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் என்ன? அவர்கள் எதற்காக போராடி வருகின்றார்கள். அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை      நாம் தெளிவாக கூறுவோம். அந்த தேர்தல் விஞ்ஞாபனமே தமிழ் மக்களுடைய ஜனநாயக  பிரகடனமாக இருக்கும்.

இந்நாட்டில் நல்லிணக்கம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டுமானால் அரசியல் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் அவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்.

வடகிழக்கில் காணாமல் போனோர் தொடர்பாக உறவினர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றார்கள்.  காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் 5 ஆயிரம் முறைப்பாடுகள் இராணுவத்துக்கு எதிரான முறைப்பாடுகள் ஆகும். அதில்15 ஆயிரம் முறைப்பாடுகள் தமிழ் மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளாகும்.

தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் அரசு தீவிரமாக செயற்படவில்லையென்பதை நாம் அறிவோம். காணமால் போனோர் தொடர்பான உண்மையை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். காணாமல் போனோர் உண்மையில் காணாமல் போயிருந்தால் அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உரித்தான குடும்பங்களுக்கு போதிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். மிக நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின்   கொலை சம்பந்தமாக  இப்பொழுது தான் தீவிர விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

 புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு அடுத்த ஜூன் முடிவிற்குள் நிரந்தரமான நிறைவான அரசியல் தீர்வொன்றை சர்வவதேசத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றோம் என சம்பந்தன் தெரிவித்தார்.