எமது நாட்டின் அரசியலில் வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ளார் முன்னாள் ஜனாதிபதி. திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரத்தில் கதை விறுவிறுப்படைவது போலவும் சண்டைகள் உருவாகுவது போலவுமே எமது நாட்டின் அரசியலில் அவ்வப்போது தோன்றி கலகத்தினை விளைவிக்க முனைகின்றார் அவர் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
முன்னாள் கதாநாயகனாக இருந்த முன்னாள் ஜனாதிபதி இன்று வில்லனாக மாறிவிட்டார். அதனால் அடிக்கடி பாராளுமன்றத்தையும் மக்ளையும் குழப்பி குழம்பிய குட்டையினுள் மீன் பிடிக்கப் பார்க்கின்றார். ஆகவே மக்கள் தெளிவாக செயற்பட்டு கடந்த காலத்தில் எவ்வாறு ஒட்டு மொத்தமாக வாக்களித்து நல்லாட்சியை உருவாக்கினீர்களோ? அதில் இருந்து சற்றும் விலகாமல் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க பாடுபட வேண்டும்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கினர். ஆகவே அவர்கள் எமக்கு தரவேண்டியதையும் அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும். இந்த நாட்டிற்கு உழைப்பதற்காக வந்தவர்கள் மலையக தமிழர்கள். அதே போல் உரிமைக்காக போராடியவர்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள். இவர்கள் அனைவரும் அமைதியையும் சமாதானத்தையும் வேண்டியே கடந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆகவே சமாதானத்திற்கு எதிராக யார் வந்தாலும் எதிர்ப்போம்.
மலையகத்தில் உள்ள தமிழர்கள் உரிமையை இழந்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கிலே உள்ள தமிழர்கள் உறவுகளை இழந்திருக்கின்றார்கள். ஆகவே மலையகத்திலே தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும். இராமகிருஷ்ணர் நாமத்தில் உள்ள இப்பாடசாலையின் தொழல்நுட்ப கூடம் என் கைகலால் திறக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன். இத்தொழில் நுட்ப கூடத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தி தமது தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.