வசீம் தாஜுடீனின் மரணத்தில் சந்தேகம் – சி.ஐ.டி.

download (3)தன்னுடைய காருக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணமடைந்திருந்த றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான இரகசிய பொலிஸாரின் அறிக்கைக்கும் மற்றும் நீதிமன்ற வைத்தியரின் அறிகைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதனால் அந்த அறிக்கைகள் தொடர்பில் சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அவைதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸார், நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், இதுவரையிலும் சந்தேகநபர் எவரையும் கைதுசெய்யவில்லை. 

பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனுடைய தேவைக்காகவும் அருடைய விருப்பத்துக்கு அமையவுமே இந்த குற்றம் புரியப்பட்டுள்ளதாக சாட்சிகள் வெளிப்பட்டுள்ளன என்று பொலிஸார் யூகிக்கின்றனர்.

வசீம் தாஜுதீன் மரணமடைந்திருந்த இடத்தை சோதனைக்கு உட்படுத்தி மற்றும் அவரின் மரணம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் நால்வரையும் வைத்திய அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவருடைய மரணம் இடம்பெற்ற நாளன்று வசீம் தாஜுதீனின் அலைபேசிக்கு உள்வந்த, வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணையகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வசீம் தாஜுதீனின் சடலம், நாரஹேன்பிட்டி சாலிக்கா மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் எரிந்த நிலையிலிருந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.