நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று இன்மையினாலேயே பாரிய குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது. எனவே இவ் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வை காண்பதற்கு பாராளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வாகும் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதன் மூலம் மக்கள் தமக்குத் தேவையான அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வார்கள். அப்போது ஸ்திரமான அரசாங்கம் உருவாகும். எனவே ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை விரைவாக கலைக்கவேண்டும் என்று கோரிவருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இல்லை. பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமே பதவியில் உள்ளது. இதனால் நாட்டிலும் பாராளுமன்றத்திலும் குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது.
இவை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண்பதற்கு பாராளுமன்றத்தை கலைப்பதே காணப்படுகின்ற ஒரே தீர்வாகும் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தினால் மக்கள் பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்வார்கள். அவ்வாறு பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கம் தெரிவு செய்யப்படுமிடத்து நாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்படாது.
எந்த கட்சியை தெரிவு செய்து ஆட்சியமைக்க விடுவது என்று மக்கள் தீர்மானிப்பார்கள். ஜனவரி எட்டாம் திகதியின் பின்னர் நாட்டில் செயற்கை அரசாங்கமே அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. எனவே இதற்கு பின்னரும் காத்துக்கொண்டிருக்காமல் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்தவேண்டியது அவசியமாகும்.
நாட்டு மக்கள் தேர்தலில் போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவார்கள். அவர்கள் வாக்களித்து பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும்.
பாராளுமன்றத்தை கலைப்பதே மேல் என்று சபாநாயகர் கூட கூறிவிட்டார். எனவே இந்த விடயத்தை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தை உடனடியாக கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார்.