(ஏ.எல்.நிப்றாஸ்)
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் தானைத் தளபதியாக கருதப்படுகின்ற வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் சுகவீனமுற்றிருக்கின்றார் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் அவரைச் சென்று பார்த்த போது, ‘ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலும் படுத்த படுக்கையாய் கிடப்பது போலவே’ எனக்கு தோன்றியது.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் சமகாலத்தவராக, முஸ்லிம் அரசியல் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, சமூக விடுதலைக்காகவும், இருப்புக்காகவும், உரிமைகளுக்காகவும் தனது கடைசி காலம் வரையும் பேசியும் எழுதியும் வந்த, அந்த சேகு இஸ்ஸதீன் சில தினங்களுக்கு முன்னர் மரணித்துவிட்டார்.
முஸ்லிம்களுக்கான அரசியல் உருக்குலைந்து படுக்கையில் கிடக்கின்ற இக்காலத்தில், முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரிவினர் மீண்டும் பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்ற போதும் அங்கும் உரிய மதிப்பின்றி நிற்கின்ற ஒரு சூழலில், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலை வலியுறுத்திய சேகு இஸ்ஸதீனின் மரணம் நிகழ்ந்திருக்கின்றமை கவனிப்பிற்குரியது.
வேதாந்தி சேகு இஸ்ஸதீனை கிழக்கு முஸ்லிம்களில் ஒருபகுதியினர் கொண்டாடினர். இன்னும் பலர் கண்டுகொள்ளவில்லை. அன்றிருந்த அரசியல் சூழலில் மக்கள் அவருக்கு வாக்களித்து நேரடியாக தெரிவு செய்யவில்லை. காலம் அவரை தேசியப்பட்டியலிலேயே நியமித்து அழகுபார்த்தது என்பதே வரலாறு.
சேகு இஸ்ஸதீனின் மரணம் நமது காலத்தின்
பெரும் இழப்பாகும்.
இன்று எல்லோருமே சேகுவின் மரணத்திற்குப் பிறகு அந்த வெற்றிடத்தை உணர்கின்றார்கள். முஸ்லிம் தனித்துவ அரசியல் சோபை இழந்துள்ள இன்றைய காலகட்டத்தில் அவரது மறைவோடு முஸ்லிம்களின் அரசியல் விடுதலைப் போராட்டமும், முஸ்லிம் தேசியம், முஸ்லிம் சமஷ்டி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளும் தூர்ந்து போகுமோ என்ற கவலையை இந்த மரணம் ஏற்படுத்தியிருக்கின்றது.
சேகு இஸ்ஸதீனின் அரசியல் தொடர்பிலும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அதனையெல்லாம் தாண்டி முஸ்லிம்களிற்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் அவர் முக்கியமானவர். முஸ்லிம் தேசியம், சுயநிர்ணயம், முஸ்லிம்களுக்கான தனி அலகு, முஸ்லிம்களுக்கான உரிமை பற்றி தெட்டத்தெளிவாகவும் அர்த்தபுஷ்டியாகவும் பேசி வந்தார்.
சேகு இஸ்ஸதீன் – அறிவிலும் ஆற்றலிலும் பேச்சிலும் தோற்றத்திலும் கூட திடகாத்திரமானவர். விடுதலை வேட்கை இயல்பாகவே இருந்தது. அவர் மிகவும் துணிச்சல்மிக்க அரசியல்வாதி என்பார்கள்.
ஆனால் ‘தன்னை இந்த மக்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை’ என்ற கவலை அவரிடம் இருந்ததை அறிவேன்.
1980களில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.சேகு இஸ்ஸதீன் உட்பட பலர் இணைந்து முஸ்லிம்களுக்கு தனியான ஒரு அரசியல் இயக்கம் தேவை என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸை நிறுவினர். இலங்கை முஸ்லிம் அரசியலில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். அந்த ‘மரத்தை’ நட்டவர்களை விட புதிதாக வந்தவர்களே கனிகளை சுவைத்தார்கள் என்பது தனிக்கதை.
மு.காவின் யாப்பு, கொள்கைகளை வகுப்பதிலும் கணிசமான பங்கை ஆற்றியதுடன் அக்கட்சியின் ஸ்தாபக தவிசாளராக கோலோச்சினார். சேகு இஸ்ஸதீன் என்றொரு ஆளுமை இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கமே இருந்திருக்காது என்று மறைந்த தலைவர் அஷ்ரப் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியிருக்கின்றார்.
மர்ஹூம் எம்.ஐ.எம் மொஹிதீன் முஸ்லிம்களுக்கான உரிமைகள் பற்றி முன்வைத்த கருத்தியலை உள்வாங்கி அதனை தனித்துவ அடையாள அரசியல் சித்தாந்தமாக முன்நகர்த்தியவர் சேகு எனலாம்.
அதனை மக்கள் மயப்படுத்துவதற்கும் அரசியல் வெற்றியாக மாற்றுவதற்கும் அஷ்ரஃபின் மக்களை ஆகர்ஷிக்கும் அரசியல் நகர்வு காரணமாக அமைந்தது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பிறகு வடக்கு. கிழக்கு மாகாணங்கள் வெகுசன வாக்கெடுப்பின்றி இணைக்கப்பட்டன. இந்திய இராணுவம் வந்தது. இதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், சுட்டுக் கொல்லப்பட்ட அலிஉதுமான் தொட்டு அதாவுல்லா, ஹிஸ்புல்லா, ஹசன்அலி, ஜவாத் மரைக்கார் என பலரும் விரும்பவில்லை.
இதற்கிடையில், 1988இல் நடைபெற்ற இணைந்த வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது. அதன் பின்னர் வரதராஜப் பெருமாளை முதலமைச்சாரகக் கொண்டு நிறுவப்பட்ட மாகாண சபையில் (அதன் முதலும் கடைசியுமான) எதிர்க்கட்சித் தலைவராக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டார்.
தனியீழ பிரகடனத்தையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாண சபையில் வெளிநடப்பு செய்தது. மாகாண சபை கலைக்கப்பட்ட கையோடு விடுதலைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கின.
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள், கடத்தல்கள். கப்பம் பறிப்புகள் இடம்பெற்றன.
இதனால் முஸ்லிம் அரசியல் இன்னும் வீரியமாக தனிவழியில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது சமூக விடுதலைப் போராட்டத்தின் தானைத் தளபதியாக இருந்தவர் சேகு இஸ்ஸதீன் எனலாம். கிழக்கில் அக்கரைப்பற்று உள்ளிட்ட ஊர்களில் வாழும் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக இளைஞர்களை தயார்படுத்தியதுடன் அதற்கான தைரியத்தையும் வளத்தையும் வழங்கியதில் இவருக்கு பிரதான பங்குள்ளது.
முஸ்லிம் பிரதேசங்களையும் எல்லைக் கிராமங்களையும் காப்பாற்றுவதற்காக அந்தக் காலத்தில் இவரும் இவரோடு அன்றிருந்தவர்களும் ஆற்றிய பணி அளப்பரியது. அதனால்தான் அவர் முஸ்லிம் அரசியலின் சேகுவேரா என்று அழைக்கப்படுகின்றார்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் இதனை அறியமாட்டார்கள்.
இந்தக் கட்டத்தில்தான், எம்.எச்.எம்.அஷ்ரப், சேகு இஸ்ஸதீன் போன்றோர் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத குழுக்களையும் நேரிடையாகவே எதிர்த்தனர். ‘இலங்கை-இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச்சாசனம்’ என்று பகிரங்கமாக பேசினர்.
வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இருவருமே வலியுறுத்தினர்.
1992 மே 16ஆம் திகதி தவிசாளர் சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு அந்தக் காலத்தில் முஸ்லிம் அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பிறகு முஸ்லிம் கட்சியின் ஊடாக அரசியலை முன்னெடுத்தார். 2000ஆம் ஆண்டு ஐ.தே.க. தேசியப்பட்டியல் ஊடாக முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினரானார்.
அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு அவரது பாரியார் பேரியல் அஷ்ரபுடன் இணைந்து சேகு இஸ்ஸதீன தேசிய ஐக்கிய முன்னணி கட்சியில் அரசியலை முன்னெடுத்தார். இந்நிலையில், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். பிரதியமைச்சராகவும். அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் பதவி வகித்தார்.
சேகு இஸ்ஸதீனை ஒரு ஹீரோவைப் போலவே இளைஞர்கள் கருதிய காலமுண்டு.
அவரது பேச்சில், நடை உடை பாவனையில் கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் கட்டுண்டு கிடந்தனர்.
ஒரு தானைத் தளபதியாக அவரும், அவருக்கு கட்டுப்படுகின்றவர்களாக இளைஞர்களும் இருந்தனர். அஷ்ரபுக்கு நிகரான தளத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய ஒரேயொரு அரசியல் ஆளுமையாக அவர் கருதப்பட்டார்.
முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி, முஸ்லிம்களுக்கு ஆயுதக் குழுக்களால், இந்திய இராணுவத்தால், அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட அநியாயங்கள் பற்றி, இச் சமூகத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக வலியுறுத்தி வந்தார்.
ஆகவே, முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்காக முஸ்லிம் இளைஞர்களை உணர்வெழுச்சி கொள்ளச் செய்ததிலும், முஸ்லிம்களுக்கான தனி மாகாணம், சமஷ்டி அலகு, சுயநிர்ணயம், இனப் பிரச்சினை தீர்வில் உரிய பங்கு என்ற விடயங்களை கருத்தியல் ரீதியாக முன்வைத்ததிலும் சேகு முதன்மையானவர்.
அந்த வகையில், அவர் வெளியிட்ட ‘முஸ்லிம் சமஷ்டி’, ‘முஸ்லிம் சுயநிர்ணயம்’ என்ற நூல்கள் மிக முக்கியமானவை
ஆனால் ஒன்று –
இ;வ்வாறு சேகு இஸ்ஸதீன் முன்வைத்த முஸ்லிம் தேசியம், சுயநிர்ணயம். சுமஷ்டி, தனி அலகு ஆகியவற்றின் ஆழஅகலம் என்னவென்பது கடந்த 25 வருடங்களில் எம்.பி.யாக இருந்த ஓரிருவரைத் தவிர வேறு எந்த முஸ்லிம் எம்.பி.க்களுக்கும் ஒன்றுமே தெரியாது.
இவர்களுள் இரு கட்சித் தலைவர்களும் உள்ளடக்கம் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்
எனவே, மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் தனது காலத்தில் தன்னால் முடியுமானதை செய்துவிட்டு போய்விட்டார். குறிப்பாக, அடுத்த தலைமுறைக்கான கருத்தியலை விட்டுச் சென்றுள்ளார்.
அவரது வெற்றிடத்தை எவ்வாறு நிரப்பப் போகின்றோம்? இன்றைய இழிநிலையில் இருந்து முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலை எவ்வாறு மீளக் கட்டியெழுப்பப் போகின்றோம்? என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் முன்னுள்ள கேள்வியாகும்.
‘நமது பெருமைகள், வீர வரலாறுகள் புராணங்களாகி விடக் கூடாது’ என்று சேகு இஸ்ஸதீன் கூறுவார்.
எனவே நமது முஸ்லிம் அரசியலின் முன்கதையை இனைஞர்களுக்கு கூறி, முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவ அரசியலை மீளமைத்து முன்கொண்டு செல்வதுதான் நம்மீதுள்ள கடமையாகும்.
(வீரகேசரி – 01.12.2024)