நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறும் அனுரகுமார திஸாநாயக்க, இந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக, நீதிமன்றம் செல்லாதது ஏன்? என கேட்கின்றார் ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன்

ஊடகப்பிரிவு-

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, கூட்டணியின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன், வெள்ளிக்கிழமை (06) குருநாகல் மாவட்டத்தின் பானகமுவ, பறகஹதெனிய, மல்லவப்பிட்டிய, பந்தாவ மற்றும் சியாம்பலாகஸ்கொடுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“ஒன்லைன் வீசா மோசடியில் 1300  பில்லியன் டொலரை பொக்கற்றுக்குள் புகுத்த முயன்ற  மனுஷ நாணயக்காரவின் மோசடி முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியதால் இம்மோசடி தவிர்க்கப்பட்டது.

புற்றுநோய் மருந்துகளில் கலப்படம் செய்து, அதிக பணம் ஈட்டிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவற்றுக்கு எதிராக மக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே போராட்டம் செய்தன. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவற்றைத் தடுக்காமல், தனது அமைச்சரவையை பாதுகாத்தார். கள்வர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திராணி ரணிலிடம் இல்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதியால்தான் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்க முடியும் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி, இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறும் அனுரகுமார திஸாநாயக்க, இந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக, நீதிமன்றம் செல்லாதது ஏன்? தவறை தண்டிப்பதற்கு அதிகாரம்தான் தேவை என்பதில்லை. கவர்ச்சியான பிரச்சாரங்களால், இளைஞர்களைத் திசை திருப்புவதற்கு கையாளும் தந்திரங்களாகவே ஜே.வி.பியின் பிரச்சாரங்கள் உள்ளன. ஒரு தடவையாவது அதிகாரத்தை ஒப்படைக்குமாறு கோரும் இவர்களிடம் எந்த அருகதையும் இல்லை. அனுபவமற்ற எம்.பிக்கள் ஆட்சியதிகாரத்துக்கு அவசரப்படுவதேன்? கோட்டாவின் காலத்தில் நிகழ்ந்தவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரட்ன மற்றும் கபீர்ஹாஸிம் போன்ற பொருளாதார முனைவர்கள் எங்களது அணியிலேயே உள்ளனர்.

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரான சஜித், ஏழைகளின் துயரங்களைத் தெரிந்தவர். அவரது தந்தையாரின் அத்தனை குணங்களும் மற்றும் ஆளுமைகளும் சஜித்திடம் உள்ளன. சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை சஜித் பிரேமதாசவின் ஆட்சியே உறுதி செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments