போராளிகளினாலேயே ரவூப் ஹக்கீம் மு.கா தலைமைத்துவத்தில் இருந்து விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை

(கல்முனை செய்தியாளர்)

தனது சுயநல அரசியலுக்காகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சமூக நலன் கருதிய கோரிக்கைகளை முன்வைக்காமல், நிபந்தனை எதுமின்றி  சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் விசனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது நாட்டினதும் மக்களினதும் எதிர்கால சந்ததியினரதும் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்ற முக்கியத்துவமிக்க தேர்தலாக கருதப்படுகிறது.

கோட்டாபய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு,  அதலபாதாளத்திற்குள் தள்ளப்பட்ட இந்த நாட்டை தனியொருவனாக துணிச்சலுடன் பொறுப்பேற்று, வீழ்ந்த பொருளாதாரத்தை குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்பி, நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய ஒரு தலைவராகப் போற்றப்படுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் வைத்திருப்பதா அல்லது அந்த இக்கட்டான தருணத்தில் நாட்டைப் பொறுப்பேற்கப் பயந்து ஓடி ஒளிந்த கோழைகளை ஆட்சியில் அமர்த்துவதா என்பதே இத்தேர்தலின் தொனிப் பொருளாக அமைந்திருக்கிறது.

அது மாத்திரமன்றி எமது முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சியின்போது இனவாத நெருக்குவாரங்கள் எவையுமின்றி சமத்துவத்துடன் நிம்மதியாக வாழ்கின்ற இந்த பொற்காலம் நீடிக்க வேண்டுமா அல்லது இன ரீதியாக நசுக்கப்படுகின்ற ஒரு யுகம் மீண்டும் உருவாக வேண்டுமா என்பதை முஸ்லிம்கள் விஷேடமாக சிந்தித்து செயற்பட வேண்டியதொரு தேர்தலாகவும் நோக்கப்படுகிறது.

இந்த பின்புலத்திலேயே வருகின்ற தேர்தலில் எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொறுப்பற்ற முறையில், தனக்களிக்கப்பட்ட அமானிதத்தையும் பேரம் பேசும் சக்தியையும் முழுக்க முழுக்க தனது சொந்த சுயநல அரசியலுக்காக ஏலம் போட்டிருக்கிறார்.

மறைந்த எமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ ஆசனத்தில் இருந்து கொண்டு முற்றிலும் அவருக்கு மாறான அரசியல் நிலைப்பாட்டிலேயே ரவூப் ஹக்கீம் பயணித்துக் கொண்டிருக்கிறார். சமூகத்திற்கு பாதுகாப்பு அரணாக செயற்பட வேண்டிய தலைமை தொடர்ந்தும் துரோகத்தனங்களையே மேற்கொண்டு வருகிறது.

மர்ஹூம் அஷ்ரப் அவர்களினால் சமூகத்திற்கான பேரம் பேசும் சக்தியாக முன்கொண்டு செல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் இன்று ரவூப் ஹக்கீமினதும் அவரது சகாக்களினதும் கஜானாவை நிரப்புவதற்கான வியாபார நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கிறது. சில வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளின் கைக்கூலியாகவே ரவூப் ஹக்கீம் செயற்பட்டு வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருக்கு ஆதரவு வழங்குவதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி முன்வைத்த கோரிக்கைகளும் நிபந்தனைகளும் அவற்றின் ஊடாக நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்றில் தடம்பதித்துள்ளன. அவரது காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்ட மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் கட்சி ஆதரித்த வேட்டாளர்களே வெற்றியீட்டியிருந்தனர். அதனால் கட்சியின் பேரம் சக்தியானது சமூகத்தின் நலன்களுக்காக அதியுச்சமாக பயன்படுத்தப்பட்டதை அறிவோம்.

ஆனால் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவ காலத்தில் மு.கா. ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், பொன்சேகா, சஜித் ஆகியோர் தோல்வியைத் தழுவியிருந்தனர். மைத்திரியின் வெற்றியின்போது மக்கள் அலையென திரண்ட பின்னர் ரவூப் ஹக்கீம் இறுதி நேரத்தில் சேர்ந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷவை முதல் இரு தடவையும் எதிர்த்து விட்டு, அவர் வென்ற பின்னர் அவரது அரசாங்கத்தில் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ரவூப் ஹக்கீமின் மு.கா. கூட்டுச் சேர்ந்த ஐ.தே.க. அணி ஒருபோதும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் இத்தகைய தேர்தல் பின்னடைவுகளுக்கு காரணம் யாதெனில் தேர்தல் வியூகம் வகுப்பதற்கோ தூரநோக்கு சிந்தனையுடன் தீர்மானங்களை எடுப்பதற்கோ ரவூப் ஹக்கீமிடம் அரசியல் ஞானமோ ஆற்றலோ இல்லாதிருப்பதும் சமூக அக்கறையற்ற சுயநலப் போக்குமேயாகும்.

சஜித் பிரேமதாசவுக்கான ரவூப் ஹக்கீமின் தற்போதைய தீர்மானமும் இந்த வரிசையிலேயே அமைத்திருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக கூறி வைக்கிறேன்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைந்த 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன முன்னணி வெற்றியீட்டி ஆட்சியமைத்த போது அதில் பலம் பொருத்திய அமைச்சுப் பதவியை கேட்டுப்பெற்ற ரவூப் ஹக்கீம், ஒரு வருடத்திலேயே அந்நிய சக்திகளின் வரப்பிரசாதங்களுக்காக ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோயிருந்தார்.

இந்தக் காட்டிக்கொடுப்பே முஸ்லிம் சமூகம் மீதான சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் பகைமையுணர்வுக்கு காரணம் என்று புத்திஜீவிகள் மட்டத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ரவூப் ஹக்கீமின் தேர்தல் வியூகம் என்பது எப்போதுமே அவரது சுயநல அரசியலை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை உணராத வரை போராளிகளை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு தொடர்ந்தும் இவ்வாறே செயற்படுவார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் சமூகத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலும் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க விரும்புகின்ற நிலையில், சமூக நலன்கள், அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் எவ்வித கரிசனையும் கொள்ளாமல், நாட்டு நலன்களையும புறந்தள்ளி விட்டு ரவூப் ஹக்கீம் அவர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறார் என்றால் அது தனது எதிர்கால அரசியல் இருப்பை மையப்படுத்தியும் அந்நிய சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவுமே என்பதை மு.கா போராளிகள் விரைவில் உணர்வார்கள்.

இப்போராளிகளினாலேயே ரவூப் ஹக்கீம் மு.கா தலைமைத்துவத்தில் இருந்து விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – என்று ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்துள்ளார்.