லோக்சபாவில் பிரதமர் மோடியை பேச விடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சி , ஜனநாயக மரபுகளில் இத்தகைய செயல்களுக்கு இடமில்லை என்கின்றார் மோடி !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின், முதல் பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, செய்தியாளர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:

அனைத்து எம்.பி.,க்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

கடந்த ஜனவரி முதல் தேர்தல் களத்தில் நாம் மக்களை சந்தித்தோம். அவர்களிடம் என்னென்ன கூற வேண்டுமோ அனைத்தையும் தெரிவித்தோம். மக்களும் தங்கள் தீர்ப்பை அளித்து விட்டனர்.

இதுவரை அவரவர் தங்கள் கட்சிக்காக போராடினீர்கள். இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.

எனவே, கட்சி வேற்றுமைகளை கடந்து அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நாம் மக்களுக்காக பணியாற்ற பார்லிமென்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரும் 2029, ஜனவரி முதல் மீண்டும் நீங்கள் தேர்தல் களத்தை சந்திப்பீர்கள். அப்போது நீங்கள் நினைக்கும் அரசியல் விளையாட்டுகளை ஆறு மாதங்களுக்கு விளையாடுங்கள்.

அதுவரை, 2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும், ஏழை எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கவும் நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

கடந்த 2014க்கு பின், சில கட்சிகள் தங்கள் அரசியல் தோல்வியை மூடி மறைப்பதற்காகபார்லிமென்டில் எதிர்மறை அரசியல் செய்ய துவங்கினர்.

இதனால், பல எம்.பி.,க்கள் சபையில் தங்கள் தொகுதி பற்றி பேசவும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பின்றி போனது. இதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல்முறை எம்.பி.,க்கள் சபையில் பேச அனைத்து கட்சிகளும் அனுமதிக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரல்வளையை நெரிக்க ஜனநாயக விரோத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமரின் குரலை ஒடுக்க இரண்டரை மணி நேரம் முயற்சி நடந்தன. ஜனநாயக மரபுகளில் அத்தகைய செயல்களுக்கு இடமில்லை.

பார்லிமென்ட் அரசியல் கட்சிகளுக்கானது அல்ல; இந்த தேசத்துக்கானது. இது எம்.பி.,க்களுக்கான இடம் மட்டுமல்ல, 140 கோடி மக்களுக்கானது.

இந்த முறை அனைத்து எம்.பி.,க்களும் தங்கள் பங்களிப்பை அளிப்பர் என எதிர்பார்க்கிறேன். எதிர் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் அவை எதிர்மறையான கருத்தாக இருப்பது தான் தவறு.

நாட்டு மக்களுக்கு நான் அளித்துள்ள உத்தரவாதங்களை படிப்படியாக நிறைவேற்ற நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம். அமிர்த காலத்தை உருவாக்க இந்த பட்ஜெட் மிக முக்கியமானது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான எங்கள் பணியின் திசையை நிர்ணயிக்கும் பட்ஜெட் இது. மேலும் 2047ல் ‘விக் ஷித் பாரத்’ என்ற வளர்ந்த இந்தியா எனும் கனவை நிறைவேற்ற வலுவான அடித்தளத்தை அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.