போரில் துரதிஷ்டவசமாக பொதுமக்கள் உயிரிழந்தனர் , அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கனேடியப் பிரதமரின் அறிக்கை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள கருத்தை முழு மனதுடன் வரவேற்கின்றோம்.
உண்மை நிலைமை அறியாது சர்வதேசத் தலைவர்கள் கண்டபடி அறிக்கைகளை வெளியிடக்கூடாது. இலங்கையில் போர் நடந்தது உண்மை. அதில் தமிழீழ விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் உயிரிழந்தது உண்மை.
மக்களும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததும் உண்மை. அதற்காக இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கனேடியப் பிரதமரின் கூற்றை அடியோடு மறுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.