ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனா இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்த நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர், சீனர்களுக்குத் துறைமுகம் சொந்தமில்லை. துறைமுகம் இலங்கையிடமே உள்ளது, ஆனால் துறைமுகத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீனா வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக அதிகார சபையால் துறைமுகத்தை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதே இதற்கான காரணமாகும்.
சீனாவைத் தவிர, துறைமுகத்தைக் கையேற்க யாரும் இல்லை. எனவே அதை மூடுவதே தமது மற்றுமொரு தெரிவாக இருந்தது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் நோக்கில், இலங்கை கடற்படையின் தெற்கு கட்டளை ஹபாந்தோட்டையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அமெரிக்க மற்றும் ஜப்பானியப் போர்க் கப்பல்கள் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. துறைமுகத்திற்கு அடிப்படை இராணுவ மதிப்பு இல்லை. சீனர்கள் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்களால் முடியாது.