பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல,பொதுத்தேர்தலில் இழந்த மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி தேர்தல் ஊடாக ஒருபோதும் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2023 ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு குறித்து அறியாமல் இவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 31(3 அ) மற்றும் (ஆ) உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதி தனது 4 வருட பதவி காலத்தை முழுமைப்படுத்துவதற்கு முன்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும், அவ்வாறாயின் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும்.
இருப்பினும் 31(3) இ உறுப்புரையில் மக்களால் தெரிவு செய்யப்படாத இடைக்கால ஜனாதிபதியால் நான்கு வருட பதவி காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.