இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இணக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் நேற்று அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சற்று முன் நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இதன்மூலம் எமது கடன்களை மறுசீரமைத்துக் கொள்வதற்கான சக்தி எமக்குள்ளது என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வங்குரோத்து நாடு என்ற நிலை இனி இருக்காது.
இதனால் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்க முடியும். அதேபோல் எமது வெளிநாட்டு அந்நியச் செலாவணி அதிகரிக்க எமது இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை கிரமமாக நீக்க முடியும்.
அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், சுற்றுலாத்துறைக்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முதல் சுற்றில் வழங்கப்படும்.
இந்த இணக்கத்திற்கமைய நாம் இங்கிருந்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். எமக்கு இந்த இணக்கப்பாட்டை எட்டுவதற்கு பங்களிப்புச் செய்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உயர் அதிகாரிகள் இருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இது குறித்த முழுமையான உரையொன்றை நாடாளுமன்றில் நாளை ஆற்றுவேன். அத்துடன் இந்த ஒப்பந்தத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.