‘எங்களையும் ,காஷ்மீரையும் பிரிக்க முடியாது ‘-பாகிஸ்தான் ராணுவ தளபதி

201506040021191197_We-and-Kashmir-can-not-be-separatedPakistan-army-chief_SECVPF

எங்களையும், காஷ்மீரையும் பிரிக்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கூறினார்.

இஸ்லாமாபாத் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பேசியதாவது:–

1947–ல் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டபோது காஷ்மீர் விவகாரத்துக்கு மட்டும் தீர்வு காணப்படவில்லை. பாகப் பிரிவினையில் முற்றுப்பெறாத ஒன்றாகவே இதுவரை காஷ்மீர் பிரச்சினை உள்ளது. எங்களையும்(பாகிஸ்தான்), காஷ்மீரையும் எந்த விதத்திலும் பிரிக்க முடியாது.

எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். எனவே ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அப்போதுதான் காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறி இப்பிராந்தியத்தில் அமைதி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போர்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘எதிர்கால போர்களால் எல்லையின் வரையறையில் மாற்றம் ஏற்படும். அதேநேரம் இந்த போர்களில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் பாகிஸ்தானிடம் இருக்கிறது. நமது எதிரிகள் நாட்டில் தீவிரவாதத்தை கிளறிவிட்டு, மோதல்களை உருவாக்கி நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற சதித்திட்டங்களை முறியடிப்பதில் உறுதியாக இருக்கிறோம். அவற்றை தோற்கடிக்கும் சக்தியும் நமக்கு இருக்கிறது’’ என்றார்.

மறைமுகப்போர் குறித்து பேசிய ரஹீல் ஷெரீப், ‘‘எந்த நாட்டுடனும் மறைமுகமாக போர் நடத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரம் எங்கள் மீது யாரும் மறைமுகமாக போர் நடத்துவதையும் அனுமதிக்க மாட்டோம்’’ என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தனது நாட்டில் தீவிரவாத செயல்களைத் தூண்டி விடுவதாக தொடர்ந்து பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது