சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ஆரம்பம் !

download

காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, த.மா.கா. ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்து உள்ளன. இந்த தொகுதியில், ஜெயலலிதாவை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் போட்டியிடுகின்றன.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் முத்தரசனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் சென்னையில் நேற்று சந்தித்து பேசினார்கள்.  அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

தண்டையார்ப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-ல் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரியாக அந்த மண்டலத்தில் அதிகாரியாக இருந்த சவுரிராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான விக்ரம் கபூர் நேற்று காலை பார்வையிட்டார்.

முதல் நாளான நேற்று சுயேச்சையாக போட்டியிடும் சமூக சேவகர் ‘டிராபிக்’ ராமசாமி வேட்பு மனுதாக்கல் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஆதரவு தரும்படி கேட்ட கட்சிகள் ஆதரவு தரவில்லை. என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் மக்களை நம்புகிறேன். மக்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்கள்’’ என்றார்.

இதேபோல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன், அகமது ஷாஜஹான், ரவி, ஆபிரகாம் ராஜமோகன் ஆகியோரும் நேற்றுவேட்பு மனுதாக்கல் செய்தனர். 

மனுதாக்கல் செய்ய வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை 11-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 13-ந் தேதி (சனிக்கிழமை) கடைசி நாள். 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.