கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன.
பல்வேறு காரணங்களால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் மற்றும் ஒட்டுமொத்த பாடசாலைக் கல்விச் செயன்முறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சை கற்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்விப் பணிகளில் சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், மனிதாபிமான விடயங்கள் பலவற்றை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்திற்கு தற்காலிக நிவாரணம் அல்லது ஒத்திவைக்கப்பட்ட நிவாரணம் வழங்குமாறு கோரி ஆசிரியர் தொழிலில் பணியாற்றும் பலர் ஜனாதிபதிக்கு தமது முறைப்பாடுகளை கடிதம் மூலம் அனுப்பியிருந்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆசிரியர் குழுவொன்றும் ஆசிரியர் இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் தமது இடமாற்றத்தை அரசியல் பழிவாங்கல் என சித்தரிப்பதற்குத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.