2040ம் ஆண்டில் பெருங்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு 1979 மற்றும் 2019க்கு இடையில் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள 12 ஆயிரம் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தது. இதில், 2005ம் ஆண்டு முதல் உலக பெருங்கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டில் விரைவாக முன்னேறி வருவதை கண்டறிந்தனர். 1990ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஏற்ற இறக்கமான அளவிலும், ஆனால் தேக்கமான நிலையிலும் இருந்துள்ளது. இது தற்போது விரைவாக அதிகரித்துள்ளது.

இதனால், இது தொடர்பாக விஞ்ஞானிகள் அவசர கொள்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் 2040ம் ஆண்டில் பெருங்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து 5 கையர்ஸ் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநரும், அறிக்கையின் ஆசிரியருமான லிசா எர்டில் கூறுகையில், ” ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய பிளாஸ்டிக்கில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் கடலில் சேர்ந்ததும் அது சிதைவடையாமல், மாறாக சிறிய துண்டுகளாக உடைந்துவிடும். இந்த துகள்கள் உண்மையில் எளிதில் சுத்தம் செய்யக்கூடியதில்லை. தங்கள் ஆய்வில், கடல்களை சுத்தப்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கும் பதிலாக உற்பத்தி மற்றும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், மறுசுழற்சி போன்றவை மாசுபாட்டின் ஓட்டத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறினார்.