ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
ஏ.எல்.எம். அதாஉல்லா, பா.உ.
அம்பாரை மாவட்ட இணைப்புக் குழு கூட்டம் கடந்த 2023.02.28ம் திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கிய விடயங்களினை செயற்படுத்தும் விதம் தொடர்பாக காத்திரமான பல கருத்துரைகளை முன்வைத்தார்.
நிகழ்ச்சி நிரலில் இலக்கம் 04 பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். எம். முஷாரப் அவர்களினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அதில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், அக்கரைப்பற்று கல்வி வலையத்தில் ஆங்கில ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாகவும் பொத்துவில் கல்விக் கோட்டத்தில் வெற்றிடம் நிலவுவதாகவும், ஒலுவில் சம்மாந்துறை பிரதேசங்களில் யானை மனித மோதல் உயர்ந்து காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் போது கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா பொத்துவில் பிரதேசத்தில் ஆங்கில ஆசிரியர்களின் தட்டுப்பாடு நிலவினால் அதற்கான இடமாற்றங்களை செய்து நிவர்த்தி செய்வதுடன் இடமாற்றத்தில் செல்லும் ஆசிரியர்களை சரியாக ஐந்து வருடங்களில் மீளப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் என்ன சொல்கிறீர்கள் என்றார்? அவ்வேளை அக்கரைப்பற்று வலயத்தில் மேலதிக ஆங்கில ஆசிரியர்கள் யாரும் இல்லை என்பதுடன் அவர்கள் இருமொழி கற்கைக்காக நியமிக்கப்பட்டிருப்பதாக மாகாண கல்விச் செயலாளர் மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்வி அதிகாரிகள் கூறினார்கள்.
தொடர்ந்து யானை மனித மோதல் தொடர்பாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா இலங்கைக்கு தேவையான 30% காடுகளும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் இருக்கவேண்டும் என்று சிலர் கருதுவதை போல் யானைகளும் கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்களா? என்ற கேள்வியினை ஆளுநர் மீதும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீதும் தொடுத்து இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காணுங்கள் என்றார் .
மேலும் நிகழ்ச்சி நிரலில் இலக்கம் 17 மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவினால் தாழ்வான மற்றும் சதுப்பு நிலங்களில் ஒழுங்கான அபிவிருத்திகளை உருவாக்குதல், பொதுமக்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பால் ஏற்படும் பேரிடர்களை தவிர்த்தல்,பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதன்போது அனர்த்த முகாமைத்துவ குழுவினை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா “இந்த வகையான பிரச்சினை எங்கு காணப்படுகிறது ?”என்று வினவினார். அப்போது அவர்கள் தில்லையாறு, சம்புகளப்பு, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது என குறிப்பிட்டனர்.
அவ்வேளை பதிலுரைத்த பாராளுமன்ற உறுப்பினர் நான் நெடுங்காலமாக இந்த பிரச்சினையை பேசிவருகிறேன் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது நீங்களாக உணர்ந்து அதனை தடுக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இதன்போது சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சதுப்பு நிலத்தினை நிரப்பவுதற்காகவே அக்கரைப்பற்றில் தாய் சேய் நிலையமொன்றினை தில்லையாற்றின் தீரத்தில் கடந்த அரசாங்க காலத்தில் நிறுவினார்கள். அதன் பின்னர்தான் தில்லையாறு காவு கொள்ளப்பட்டது. இதன் உண்மைத் தன்மையை கடந்த பத்து வருடங்களுக்குள் காணப்படும் கூகுள் செய்மதி படங்களில் அறியமுடியும். அந்த தாய் சேய் பராமரிப்பு நிலையம் பொருத்தமற்ற இடத்தில் காணப்படுவதனால் மக்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
நீர்பாசனத் தினணக்களத்திற்கு பொருத்தமான இடமாகவே தாய் சேய் நிலையம் தென்படுகிறது. “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள்” ஆகவே நீர்ப்பாசனத் தினணக்களம் மேற்படி நிலையத்திலிருந்து தில்லையாற்றினையும் சம்புக் களப்பினையும் இயற்கையின் எழில் கெடாமல் பாதுகாக்க முடியுமென்பதுடன்
தாய் சேய் நிலையத்திற்கு பொருத்தமான மாற்று இடம்களை எதிர்காலத்தில் இனங்காணமுடியுமென்றார்.
மேலும் கல்லோயா நீர்பாசனத் திட்டம் நடைமுறைக்கு வந்ததன் பிற்பாடு தான் தில்லையாற்றின் இருமருங்கிலுமுள்ள காணிகள் சதுப்பு நிலமாக மாறியது . நீர்ப்பாசனத் திணைக்களம் தில்லையாற்றினை முறையாக பராமரித்திருந்தால் இந்நிலை தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே எதிர்காலத்தில் தில்லையாற்றின் அருகில் காணப்படும் மண் மற்றும் சேற்றினை அகற்றி விவசாயக் காணிகளில் பொருத்தமான பயிர் வகையினை பயிரிடும் போது, நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பான சுற்றுச் சூழலினை அடைய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மேலும் கேட்டுக்கொண்டார்.